இறுக்கம் – ஜெயந்தி கார்த்திக்

செய்தி அலை சிறுகதைப் போட்டி – 16 இறுக்கம் ஜெயந்தி கார்த்திக்

மார்கழி மாதம் பிறக்க இரண்டு நாட்களுக்கு முன்பே பனி மூட்டம் கண்டிருந்தது கண்டியூர் கிராமம். இன்னும் இரண்டு நாட்களில் பிறக்கப்போகும் மார்கழியை வரவேற்க கண்டியூரில் உள்ள குளத்துமேட்டுத்தெரு பெண்டுகள் தயாராகிக் கொண்டிருந்தனர். மார்கழி மாதம் முப்பது நாட்களும் பச்சரிசி மாவினால் கோலமிடுவதும், பல வண்ணப் பொடிகளைக் கொண்டு அக்கோலத்தை அலங்கரிப்பதும் குளத்துமேட்டுத் தெருவில் வசிக்கும் பெண்டுகளுக்குக் கைவந்த கலையாகும்.

கடும் பனியையும் குளிரையும் பொருட்படுத்தாது யார் யார் வீட்டில் என்னென்ன வகையான கோலங்கள் போடுவார்கள், அவற்றில் யார் வீட்டுக் கோலங்கள் அத்தெரு மக்களால் சிறப்பாகவும் வியப்பாகவும் இரசிக்கப்படும் என்ற ஆர்வமும் குளத்து மேட்டுத் தெருவில் வசிக்கும் மக்களிடம் இன்றளவும் நிலவுகிறது.

அன்றாடம் வாசல் தெளித்து கோலமிடுவது இயல்பென்றாலும் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் மட்டும் கூடுதல் கவனத்தையும் ஆர்வத்தையும் காட்டி கோலம் போடுவதைக் குளத்துமேட்டுத்தெரு பெண்டுகள் கடைப்பிடித்து வருகின்றனர். பல பெண்டுகள் தெருக்களில் கோலமிடுவதற்கு முன்பே, கோலங்களைப் போட்டுப் பார்த்துக் கொள்வதும் வழக்கமாயிருந்தது. கோலங்கள் மறந்து விடாமல் இருக்கவும், பிற பெண்களுக்குக் கற்றுக் கொடுக்கவும் பெரிய அளவிலான கோல நோட்டு ஒன்றை தயாரித்து, அவற்றை வீட்டு சொத்து பத்திரம் போல் கவனமாக பாதுகாத்தும் வருவர் ‌.

கண்டியூரில் குளத்து மேட்டுத்தெருவில் வசிக்கும் அம்சவேணியும் அவ்வகையில் பிரத்யோகமான கோல நோட்டு ஒன்றை தயார் செய்து வைத்திருந்தாள்‌.

கண்டியூருக்கு திருமணமாகி வந்த புதிதில் அம்சவேணி கோலம் போடுவதற்கு தடுமாறிய போதெல்லாம், அவளது மாமியார் அவளுக்கு அக்கறையுடன் கோலத்தை சொல்லிக் கொடுத்தாள். தமது மாமியாரிடம் கற்றுக் கொண்ட கோலங்கள் மறக்காமல் இருக்க நோட்டு போட்டு வைத்துக் கொண்டாள். நாளடைவில் கோலம் போடுவதில் அம்சவேணி கைத் தேர்ந்தவளாக மாறினாள்.

“பொழுது பூக்கத் தொடங்கும் பனி விலகாத அவ்வேளை வாசல் தெளித்த பச்சைமண் வாசம் நாசிக்குள் நுழையும் அத்தருணம் தெருவில் இட்டிருந்த மாக்கோல புள்ளிகளை கால் கொலுசின் சின்னச் சின்ன சிணுங்கலுடனும் கை வளையல்களின் சிருங்கார ஓசையுடனும் விரல்களின் இடுக்கு வழியாய் மாவு கசிந்து கசிந்து அம்சவேணியின் மனசு வழியாய் கோலம் நர்த்தனம் கொள்ளும் அற்புதம் தெருவுக்கும் அழகு. அவளுக்கும் அழகுதான். மத்தாப் பூக்களாய் மாவு சிதறி சிதறி மானும் இடுவாள். மயிலும் இடுவாள். இன்னுமின்னும் வண்ணப் பறவைகளையெல்லாம் உயிராய் கொண்டு வந்து விடுவாள்” அதுதான் அம்சவேணி.

பல பெண்டுகள் அம்சவேணியின் வீட்டுத் தெருவிலுள்ள கோலத்தை ரசிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
பெண்கள் பலர் அம்சவேணியிடம் கோல நோட்டு இரவல் வாங்கிச் செல்வதும் தொடர் கதையாகிவிட்டது.

அம்சவேணிக்கு இருபத்தைந்து வயதிருக்கும் போது கண்டியூர் கிராமத்திலுள்ள குளத்து மேட்டுத்தெருவிற்கு திருமணமாகி வந்திருந்தாள். அவளுக்கு இப்போது வயது என்பத்தைந்து தொட்டுக் கொண்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகளாகியும் குளத்துமேட்டுத்தெருப் பெண்கள் மார்கழி மாதம் வந்துவிட்டால் அம்சவேணியின் வீட்டுக்கு கோல நோட்டு வாங்க வருவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அம்சவேணியின் வீட்டுக்கு கோல நோட்டு கேட்டு யார் வந்தாலும், தமது இளமைக்கால நினைவுகளை, அவர்களிடம் அசைபோட்டு சொல்வது அம்சவேணியின் வழக்கமாயிருந்தது. கண்டியூரூக்குத் தாம் திருமணமாகி வந்தது, மூன்று பிள்ளைகளைப் பெற்றது, தம் கணவர் தமக்காக கழிப்பறைக் கட்டிக் கொடுத்தது என்று ஒன்று விடாமல் சொல்லி விடுவாள். கோல நோட்டு வாங்க வரும் பெண்டுகளும், அம்சவேணியின் கதையை சுவராஸ்யமாக கேட்டுக் கொண்டிருக்கும் போதே அம்சவேணி “ம் என்னத்த இப்பெல்லாம் ரெண்டு வருசமா மார்கழி மாசம் ஏ வருதுன்னு இருக்குன்னு பெருமூச்சு விட்டு” கவலையாக அவள்
சொல்லும் போது, அவளின் கதையைக் கேட்டுக் கொண்டிருக்கும் பெண்டுகள் சட்டென்று சுவராஸ்யம் தொலைந்து, அம்சவேணியை கலக்கத்துடன் ஒன்றும் புரியாமல் பார்ப்பார்கள்.

அம்சவேணியின் கவலை யாரும் அறிந்திராத ஒன்றுதான். மார்கழிமாதம் விடியற்காலையில் கோலம் போடுவதற்காகவே முன்பெல்லாம் எழுந்தவள், இப்பொழுதெல்லாம் காலைக் கடனை கழிப்பதற்காக எழுந்திருக்க வேண்டியிருப்பதால் சங்கோஜப் படுகிறாள்.

மார்கழி பிறக்க இரண்டே நாட்கள் இருப்பதால் ஒவ்வொரு நாள் காலையிலும் தெருவில் போட வேண்டிய கோலத்தை முதல்நாள் இரவே போட்டுப் பார்த்து நினைவில் வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள் குளத்து மேட்டுத்தெரு பெண்டுகள். அப்பெண்டுகளில் சம்மங்கியும் குறிப்பிடத்தக்கவள். மற்றப் பெண்டுகளுக்கு இணையாகவும் நேர்த்தியாகவும் தமது வீட்டின் தெருவில் கோலம் போட்டுவிட வேண்டும் என்ற பெரும் விருப்பம் கொண்டவளாக விளங்கினாள்.

சம்மங்கியின் மாமியார் முத்துலெட்சுமியும் அம்சவேணியும் இதே கண்டியூருக்கு ஒன்றாக வாக்கப்பட்டு வந்தவர்கள்.

அம்சவேணியும் முத்துலெட்சுமியும் வேறு வேறு கிராமமாக இருந்தபோதும் கண்டியூரில் குளத்துமேட்டுத்தெருவில் வசிப்பதால் ஒருவருக்கொருவர் சினேகிதமாகிப் பழகிக் கொண்டார்கள். அந்தப் பழக்கம் இருவரும் பேரம்பேத்தி எடுத்தப் பிறகும் தொடர்கிறது.

அம்சவேணியின் வீட்டுக்கு கோல நோட்டு வாங்கி வருவதற்காகப் புறப்பட்டாள் சம்மங்கி. அவள் வெளியில் எங்கேயோ கிளம்புகிறாள் என்பதை புரிந்து கொண்ட அவளது பிள்ளைகள் இரண்டும் தாமும் வருவதாக அடம்பிடித்தனர்.

சம்மங்கியின் குழந்தைகள் அவளை விடாமல் வந்து ஒன்றோடு ஒன்று கட்டியணைக்க அவளோ “இஞ்ச ரெண்டு வூடு தாண்டி இருக்க அம்சவேணி அத்த வூட்டுக்குத்தான் போறேன். என்னமோ சீமைக்குப் போறமேரி ஏ கூட வாரனு அடம் புடிக்குறீங்க. செத்த நேரம் வெளயாடுங்க நா ஒரு எட்டு போயி கோல நோட்டு வாங்கியாந்துறேன்”ன்னு சம்மங்கி சொல்லிக் கொண்டே இருக்க, அதற்குள் மூத்த பிள்ளை அவளது கையைப்பிடிக்க இளைய பிள்ளையோ அவளது இடுப்பில் இருக்க சம்மங்கி நடக்க எத்தனித்தாள்.

இரண்டு குழந்தைகளுடன் சம்மங்கி அம்சவேணியின் வீட்டுக்கு நடைபோடுகையில், அவள் எதிரே வந்த ஒரு பெண்மணி சம்மங்கியின் அருகே சென்று “அம்மா இஞ்ச அம்சவேணி வூடு எங்கன இருக்கு”என்று விசாரித்தாள்.

“அம்சவேணி அத்த வூட்டபத்தி கேக்குறீகளே நீங்க என்ன அசலூரா”ன்னு பதிலுக்கு சம்மங்கி கேட்கவும், அப்பெண்மணி “ஆமாத்தா நா வெளியூருதா. வூட்டு வேலக்கி ஆளு வேணும்னு சொல்லி இருந்தாக அதான் வூட்ட தெரிஞ்சிக்கலாமுனு ஒன்கிட்ட கேட்டேன்”ன்னு பவ்யமாக அப் பெண்மணி கூறினாள்.

அம்சவேணி அத்த வூட்டுக்கு வேல ஆளா? அத்தயோட மருமவ அப்பப்ப தம்மைத் திட்டுவது பற்றியும், “பாளாபோன கண்ணு தெரியாம கக்கூசுல அங்கங்க அசிங்கம் பண்ணிபுடுறாங்க ஒங்க அம்மான்னு”தம் மகனுக்கிட்ட மருமவ சண்டப் போடுவது பற்றியும் அம்சவேணி அத்த தம்மிடம் பலமுறை சொல்வதை எண்ணி சம்மங்கி வருத்தப்பட்டிருக்கிறாள்.

அம்சவேணியின் வீட்டைக் கேட்ட பெண்மணிக்கு தோராயமாக ஐம்பது வயதிருக்கும். அப்பெண்மணியின் லேசாக நரைத்த கேசமும் அவளது தேகமும் அவளின் வயதைக் காட்டியது.”யாரு வூட்ட கேட்டீங்க? அம்சவேணி அத்த வூடா நா அவுக வூட்டுக்குத்தா போறேன். ஏ கூட வாங்க”என்று அப்பெண்மணியையும் தம்முடன் அழைத்துச் சென்றாள் சம்மங்கி.

சம்மங்கியும் அவளுடன் வந்தப் பெண்மணியும் அம்சவேணியின் வீட்டை சென்றடைவதற்குள் “அதோ வாசல்ல பெரிசா அவரப் பந்தல் தெரியுதுல்ல அதான் அம்சவேணி அத்த வூடு” ன்னு அடையாளம் காட்டிக் கொண்டே நடந்தாள் சம்மங்கி.

அம்சவேணியின் வீட்டுக்கு அடையாளம் சொல்பவர்கள் இரண்டு அடையாளங்களைச் சொல்ல எப்பொழுதும் மறப்பதில்லை. அம்சவேணியின் வீட்டு வாசலில் மூங்கில் கழிகளாலான நான்கு கம்புகள் ஊன்றி பந்தல் இருந்தது. அவற்றில் கொடிகளைப் படரவிட கயிறு கொண்டு குறுக்கு நெடுக்குமாக கட்டியிருந்தது.அவற்றின் மேலே அவரைக் கொடி படர விடப்பட்டிருந்தது. அவரையில் பல ரகங்கள் இருந்தாலும் பட்டை அவரைக்காய்தான் பெரும்பாலும் அம்சவேணிக்குப் பிடிக்கும் என்பதால் அவற்றையே பந்தலில் படரவிடுவாள்.

அவரைப் பந்தலில் பல நேரங்களில் பூச்சிகள் வருவதாலும் அதற்காக தனியாக நேரம் ஒதுக்க இயலாததாலும் அம்சவேணியின் மருமகள் அவ்வப்போது தம் மாமியாரைக் கடிந்து கொள்வாள். “வூட்ல சின்னப் புள்ளைங்க இருக்கு. வூட்டுக்கு முன்னாடி இந்த பந்தல் தேவையான்னு” தம் மருமகள் கோபப்படும் போதெல்லாம் தம் கணவர் தமக்காக ஆசை ஆசையாக அமைத்துக் கொடுத்தப் பந்தல் என்பதாலும், கணவருக்குப்பின் அந்தப் பந்தல்தான் தம் கணவர் போல கைக் கொடுப்பதாகவும் புலம்ப ஆரம்பிப்பாள்.

இந்த அவரைப் பந்தலின் அடையாளம் அழிக்க முடியாதது போலவே, மற்றொரு அடையாளமாக அத்தெரு மக்களால் கேலியும் கிண்டலுமாக “வெளியில திண்ணைப் பக்கமுள்ள சாக்கடையில் வெளிக்குப் போவுமே அந்தக் கெழவியா?” என்ற இந்த அடையாளமும் சில ஆண்டுகளாக அம்சவேணியின் வீட்டுக்கு அடையாள முத்திரையாகிவிட்டது‌.

இதே கண்டியூரில் இந்தக் குளத்துமேட்டுத் தெருவில் திருமணமாகி வந்த புதிதில் காலைக் கடனை கழிக்க அம்சவேணி சிரமப்பட்டிருக்கிறாள்.

அவளது கணவர் அம்சவேணிக்காக கடனவொடன வாங்கி ஒரு கழிவறையைக் கட்டித் தந்தார். ஒரு ஊரில் ஏதாவது ஒரு வீட்டில் முதன் முதலில் புதுவீடு கட்டினாலோ தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியிருந்தாலோ தொலைபேசி வந்துவிட்டாலோ யார் வீட்டிற்கு முதன் முதலில் வந்ததோ அந்தப் பெருமையைப் பலகாலம் சொல்லி வருவது வழக்கத்தில் இருக்கிறது.

அதுபோலவே “குளத்து மேட்டுத் தெருவில் அம்சவேணியின் வீடுதான், முதல் கழிப்பறை கட்டுன வீடு” என்ற பெருமையைக் கொண்டிருந்தது.

வயல்வெளிகளில் மறைவான இடங்களில் காலைக்கடனை கழிக்க அல்லல்படுவாள் அம்சவேணி. நன்றாக விடிந்துவிட்டால் மலம் கழிக்க இயலாது. இருட்டும் வரை அடக்கி வைத்து அவற்றைக் கழிப்பதற்குள் இம்சைகளையும் அவதிகளையும் பட்டிருக்கிறாள். அதற்கெல்லாம் விடிவுகாலமாக தம் கணவர் தமக்காக கழிவறை கட்டித் தந்தபோது பெரிய பேறு கிடைத்ததாக மகிழ்ந்திருக்கிறாள்.

அம்சவேணியைப் பார்ப்பதற்கு அவர் வீட்டிற்கு யாராவது வந்தால் அவர்களின் பரிதவிப்பை உணர்ந்தவளாய், தமது வீட்டுக் கழிப்பறையைப் பயன்படுத்திக் கொள்ளச் சொல்லுவாள். தொடக்கத்தில் கூச்சப்பட்ட பல பெண்கள், நாளடைவில் அம்சவேணியின் வீட்டிற்கு மலம் கழிக்க உரிமையுடன் வந்து சென்றார்கள். இந்தப் பெருமைமிகு அடையாளம் மறைக்கப்பட்டு இன்று “வெளியில் வெளிக்குப் போகும் கெழவி” என்ற அடையாளம் வந்ததற்கு அம்சவேணியின் மருமகள் ஒரு முக்கியக் காரணமாகி விட்டாள்.

எத்தனையோ ஆண்டுகள் இந்தக் கழிவறையைச் சுத்தப் படுத்துவதில் தம்மை மகிழ்வாக ஈடுபடுத்திக் கொண்டவள் தான் அம்சவேணி. தம் பிள்ளைகள் “ஏம்மா நம்ம வூட்டு கக்கூசுலதான் இந்தத் தெரு பொம்பளைங்க வெளிக்குப் போகணுமா? நம்ம வூட்டுலயே அஞ்சு பேர் இருக்கோம், இதுல தெருப் பொண்டுகளும் வந்தா கக்கூசு வீணாப் போவாதா? வெளியப் போகணும்னு வாராங்க, யாராவது ஒருத்தர் சுத்தம் பண்றாங்களான்னா அதுவும் இல்ல. ஒனக்கு என்ன தலையெழுத்தா?” என்று தாம் பெற்ற பிள்ளைகள் கடிந்து கொண்ட போதெல்லாம், “எனக்கு சொமையாத் தெரியல. நாமளா அவுக போடுற பாரத்தத் தாங்குறோம். நெலம் தானே தாங்குது. அதுவே கோடி சனங்களோட கழிவத் தாங்குறப்போ, நாம் ஒதுங்குறத்துக்கு எடம் கொடுக்குறதுல தப்புல்ல” என்று சர்வ சாதாரணமாக பதிலிறுத்தி விடுவாள் அம்சவேணி.

தற்பொழுது வயோதிகம் அம்சவேணியை ஆட்கொண்டிருப்பதால் கடந்த சில ஆண்டுகளாக அவளால் கழிவறையைப் பராமரிக்க இயலாது அல்லல்படுகிறாள். பல நேரங்களில் அம்சவேணியின் மருமகள் “ஒன்னு வெளியப் போனா தண்ணிய நல்லா வூத்துங்க. அங்கங்க பீ திட்டு திட்டா கால் வக்குற பேசின் மேலேயே கெடக்கு. அடுத்தவங்க எப்புடி போறது. பாத்தாலே அருவருப்பா இருக்கு”ன்னு அடிக்கடி சண்டை போடுவதும் அதற்காகத் தன் மகனிடம் திட்டு வாங்குவதும் அவ்வப்போது நிகழ்கிறது.

இந்நிலையில் அம்சவேணி திண்ணைக்கு அருகிலுள்ள சாக்கடையில் விடியற்காலையில் மலம் கழிக்க அல்லல் படும் போதெல்லாம் அவரைக் கொடியின் பந்தலின் மூங்கில் கம்புகள்தான் ஆதரவளிப்பதாக அவளுக்குத் தோன்றும்.

தூரத்திலிருந்து கையைக் காட்டி அடையாளம் காண்பித்துக் கொண்டே அம்சவேணியின் வீட்டை சம்மங்கியும் , அம்சவேணியின் வீட்டை விசாரித்தப் பெண்மணியும் அடைந்தனர்.

திண்ணையில் படுத்தே கிடக்கும் அம்சவேணி, திண்ணையில் இல்லாதது கண்ட சம்மங்கி, தம்முடன் வந்தப் பெண்மணியை திண்ணையில் அமரவைத்துவிட்டு, இடுப்பிலிருந்த குழந்தையையும் இறக்கிவிட்டபடி அம்சவேணியின் வீட்டிற்குள் நுழைந்தாள்.

அம்சவேணியின் மருமகள் சம்மங்கியை “பார்வையாலேயே என்ன என்பதுபோல கேட்க “அத்தகிட்ட கோல நோட்டு வாங்கிட்டுப் போலாமுனு வந்தேன்க்கா. மார்கழி பொறக்க ரெண்டு நாள்தா இருக்குன்னு தாம் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை சம்மங்கி கூறினாள் .

“ஏம்மா நீயும் கண்ணாலமாயி வந்து ஏழெட்டு வருசமாச்சி. இஞ்ச வந்து வருசா வருசம் கோல நோட்டு வாங்கிட்டுத்தா போற . ஏ எந்தக் கோலமும் நெனவுலயே இருக்காதான்னு ” சம்மங்கியின் மனம் கோணும்படி படக்கென்று கேட்டாள் அம்சவேணியின் மருமகள்.

“இல்லக்கா நெனவுல கோலமிருந்தாலும் சில கோலத்த நோட்டப் பாத்து போட்டுப் பாத்தாதான் சட்டுபுட்டுனு புடிபடும்” அதான் அத்தகிட்ட கேட்டு கோல நோட்டு வாங்கனுமுனு வந்தேன்னு அம்சவேணியின் மருமகளிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்த சம்மங்கி “அய்யோ அக்கா அத்தய கேட்டுக்கிட்டு ஒரு அம்மா வந்தாங்க. அவுங்க இஞ்ச திண்ணையிலதா ஒட்காந்திருக்காங்க”ன்னு சம்மங்கி சொல்லவும் அம்சவேணியின் மருமகள் சமயலறையை விட்டு விருட்டென்று திண்ணக்கு வந்தாள்.

திண்ணையில் அமர்ந்திருந்த பெண்மணி அம்சவேணியின் மருமகளைப் பார்க்கவும் எழுந்தாள். அந்தப் பெண்மணி வாயைத் திறப்பதற்கு முன்பே “எம் வூட்டுக்காரு சொன்னாங்க . வேல ஆளு வருவாங்கன்னு. அவுங்க நீங்கதானா? இன்னைக்கு நீங்க வருவீங்கன்னு காலையிலேயே அவரு சொல்லிட்டுத்தா வேலக்குப் போனாரு” என்று அம்சவேணியின் மருமகள் மூச்சு விடாமல் கூறவும், அந்தப் பெண்மணியும் ஆமா என்பதுபோல தலையசைத்தாள்.

வேலைக்காரப் பெண்மணியைப் பார்த்த அம்சவேணியின் மருமகள் “ஒங்களுக்கே வயசானமாரி இருக்கு. நீங்க எப்புடி எம்வூட்டு வேலயப் பாப்பீங்க? எம் மாமியாவவேற பாத்துக்கணும். முக்கியமா கக்கூஸ சுத்தம் பண்ண முடியாமத்தான் நா வேல ஆளு வைக்கிறேன். உங்களால முடியுமான்னு ” கேட்கவும்

வேலைக்கு வந்த அந்தப் பெண்மணியோ “எம் வூட்டு வவுத்துப் பொழப்புக்கு நா ஒழச்சுதா ஆகணுமுனு அப்பெண்மணி சொல்லவும்”

“அப்படின்னா நீங்க நாள காலேலேர்ந்து வேலக்கி வாங்க” என்று அம்சவேணியின் மருமகள் கூறினாள்.

குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த சம்மங்கி “அக்கா கோல நோட்டு தந்தா நா கெளம்புவேன்”ன்னு சொன்னாள்.

“ஆமாண்டி அது எம்வூட்டு சொத்து பாரு. நீ கேட்டோன எடுத்து நீட்ட. அந்த நோட்டும் அந்தக் கெழவியும் கூடப் பொறந்த பொறப்புமாரி. அத பொத்திப் பொத்தி இந்த தெரு சனங்களுக்காக வச்சிருக்குன்னு” தம் மாமியார் மேலுள்ள கோபத்தை அம்சவேணியின் மருமகள் சம்மங்கியின் மேல் உமிழ்ந்தாள்.

அம்சவேணியின் அரவத்தைக் காணாத சம்மங்கி, வீடு முழுவதும் நோட்டமிட்டு ஏமாற்றத்துடன் தம் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு நடையைக் கட்டினாள்.

இரு நாட்களாக விடியற்காலையில் மலம் கழிக்க முடியாமல் அம்சவேணி கலக்கம் கொண்டிருந்தாள். மருத்துவரைப் பார்த்து மருந்து வாங்க சென்றிருந்தாள் அம்சவேணி. மருத்துவர் மருத்துவமனையில் இல்லாததால் மருத்துவமனையிலேயே வெகுநேரம் காத்திருந்தாள்.

“ஏதோ அவசர கேஸாம் . டாக்டர் வெளியூருக்குப் போயிருக்காராம். இன்னம்மே நாளக்குத்தா வருவாராம்” என்று பக்கத்தில் இருந்த பிற நோயாளிகள் பேசிக் கொள்ளவும் அவர்கள் பேசுவதைக் கவனித்த அம்சவேணி, தான் அமர்ந்திருந்த நாற்காலியை விட்டு எழுந்து அரை மனதுடன் வீட்டிற்கு நடையைக் கட்டினாள்.

சில ஆண்டுகளாக மார்கழி மாதம் வந்தாலே ஏனோ அம்சவேணிக்குள் அச்சமும் வெட்கமும் ஒட்டிக் கொள்கிறது. விடியற்காலையில் பெண்டுகள் கோலம் போடுவதைக் காட்டிலும் தம் கோலத்தைப் பார்ப்பதை அம்சவேணியின் மனம் விரும்பவில்லை.

இரவு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல் புரண்டு புரண்டு படுத்தாள் அம்சவேணி. அவள் மலம் கழிக்காததும் அதற்கு காரணமாயிருந்தது. இன்றோடு மூன்று நாட்களாகப் போகிறது. என்ன செய்வதென்று பலவாறாக யோசித்தவள் மெல்ல எழுந்தாள். மருமகளும் தம் மகனும் பேரக் குழந்தைகளும் வீட்டினுள் அயர்ந்து தூங்கிக் கொணாடிருப்பதைப் பார்த்தாள். அவர்கள் தூக்கம் கெட்டுவிடக் கூடாதென மெல்ல மெல்ல ஓசையில்லாமல் தம் பாதத்தை அடியெடுத்து வைத்து, தம் கணவர் தமக்காக கட்டிய கழிப்பறையின் கதவைத் திறந்தாள்.

“எத்தனை நாளாகி விட்டது. இஞ்ச ஒட்காந்தா வெளிய வருமா? மூணு நாளாவப் போகுதே! கண்ணு தெரியாம மோசமா அசிங்கம் பண்ணீட்டோம்ன்னு காலயில மவனும் மருமகளும் வஞ்சா” யோசித்தவள் கழிப்பறையின் கதவைச் சத்தமில்லாமல் சாத்திவிட்டு திண்ணைக்கு வந்தாள்.

“நாள மறுநா மார்கழி பெறந்துடும். இன்னும் வெள்ளனா எந்திரிக்க வேண்டியதுதான்” என்ற சிந்தனையை ஓடவிட்டவள் அவரைப் பந்தலில் ஊன்றப்பட்டிருந்த மூங்கில் கம்புகளில் ஒன்றைப் பிடித்து லாவகமாக சாக்கடையின் கீழே குனிந்தாள். “பலம் கொண்ட மட்டும் முக்கினாள். விலா எலும்பு பருத்து எழும்பியது போல் அம்சவேணி வலியின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள். ஆசனவாயின் ஓரம் விரியமுடியாமல் இறுகியே இருந்தது. நடுமையமாக மூச்சை நெஞ்சில் நிறுத்தி நிறுத்தி முக்கினாள். இரண்டு நாட்களில் பிறக்கப்போகும் மார்கழியை பற்றிய அச்சமும் வெட்கமும் சற்று நேரத்தில் விலக, அம்சவேணியின் வலது கை அவரைக் கொடி பந்தலின் மூங்கில் கம்பையும் இடதுகை அவள் படுத்திருக்கும் திண்ணை ஓரத்தையும் கடைசியாக இறுகப் பற்றியது.

***


Exit mobile version