அப்பாவும் – ஐங்கரனும்-சுந்தர.மணிவண்ணன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 164 அப்பாவும் – ஐங்கரனும்-சுந்தர.மணிவண்ணன்

“ஹலோ……ஹலோ….அம்மாவா?”

“ஆமாண்டா….ஆனந்த்……அம்மாதான் பேசறேன்”.

“சரியாவே கேக்கல. கொஞ்சம் வெளியில வந்து பேசறியா மா”.

“இதோ வந்துட்டேன்.கொஞ்சம் வெயிட் பண்ணுடா”.

வராண்டாவிற்கு வந்த அம்மா,

“ஹலோ…ஆனந்த்… இப்ப கேக்குதா”   

மொபைலை காதின் மேல் இறுக்க அழுத்திக் கொண்டாள்.

“அப்பா எப்படி மா இருக்கார்”.

“இப்ப ரொம்ப முடியலடா. நடமாட்டம்கிறது அடியோட இல்ல.ஒரு அடி வச்சா, முட்டி பளிச் பளிச்னு வலிக்கிறதுங்கறார்.பாத்ரூம்க்கு மட்டும் கஷ்டப்பட்டு  கொண்டு போய் அழைச்சிண்டு வர்ரன்”.

“எனக்கும் வர வர எதுவும் முடியலடா.அக்கம் பக்கத்துல இருக்கிறவாள ஹெல்ப் வேணும்னு அடிக்கடி தொந்தரவு பண்ண முடியல”.

“உன்  ஃப்ரெண்ட் அருண் தான் அடிக்கடி ஒத்தாசைக்கு ஓடி வர்ரான்.

அவனுக்கும் ஆஃபீஸ் இருக்கு.அடிக்கடி ஆன்லைன் மீட்டிங்.கூட்ட நேரத்துக்கு அவனால மட்டும் ஓடி வர்ர முடியுமா??”

“நேற்று அப்பாவுக்கு திடீர்னு நெஞ்சுவலி.என்ன பண்றதுன்னே தெரியல.நம்ப டாக்டருக்கு ஃபோன் பண்ணேன்.உடனே வரச் சொன்னார்.

அருண் மீடட்டிங்குல மாட்டிட்டிண்டு, அவனால உடனே வர முடியல்ல.

நானே  உபர் வச்சிட்டு,அப்பாவை டாக்டர் கிட்ட அழைச்சிட்டு போனேன்.

இப்ப பரவால்ல.மருந்து மாத்திரைன்னு நிறைய எழுதி கொடுத்திருக்கார்.மறுபடியும் நெஞ்சு வலி வந்தா உடனே அழைச்சிட்டு வாங்கன்னு சொல்லியிருக்கார்.

அந்த பிள்ளையாரப்பன் பார்த்துக்குவான் .நீ ஒன்னும் கவலப்படாதே. நான் மேனேஜ் பண்ணிக்கிறன்”.

அம்மா அவ்வளவு அழுத்தம் திருத்தமா சொன்னாலும், அவனுக்கென்னமோ…. அப்பா, அம்மாவை அங்கே வயசான காலத்துல தனியா விட்டுட்டு….

அவன் மனசை அந்த வருத்தம் கொஞ்சம்  பிழிஞ்செடுத்தது.

அப்பா ஒரு வைதீக பிராமணன்.வருமானமோ வயித்துக்கும் வாயிக்கும்  என ஓடிக் கொண்டிருந்தது.  திடீரென வந்த தெருக்கோடி பிள்ளையார், அவர் வயித்துப் புழைப்புக்கு வழிகாட்டினார்.வேளா வேளைக்கு கோயிலை  திறந்து வைத்து, பக்தர்களுக்கு காத்திருப்பார்.

அவசர அவசரமா  பிள்ளையாருக்கு ஒரு Hi சொல்லிட்டு ஆஃபீஸ் போறவங்க,அஞ்சு நிமிஷம் அமைதியா நின்னு

காதை இழுத்து, கன்னத்தை தொட்டு கும்பிடரவங்க,நின்னு நிதானமா தோப்புக் கரணம் போட்டுட்டு, மந்திரங்களை மனசுல உச்சாடனம் பண்ணி கும்பிடரவங்க, என பல பக்தர்கள் தினம் வருவாங்க.

 சுவரில் சாய்ந்தபடி அவர் தட்டை நீட்டி நிற்கும்போது,அதிலிருந்து  விபூதியை கை நிறைய அள்ளிப்பாங்க. சிலர் மட்டும் சொல்ப காசை தட்டில் போடுவாங்க .

தட்டில் விழும் காசு தவிர, கோயில் பூஜைக்குன்னு சம்பளம் கொடுக்க நமோதாய் யாருமில்லை.. கோயில் பராமரிப்பு,குடும்ப மெயின்டெய்னன்ஸ்,எல்லாத்தையும் அப்பாதான் சமாளிக்கணும். எக்ஸ்ட்ரா வருமானத்துக்கு, சில சமயம்

 புரோகிதத்துக்கும் போவார். 

போன இடத்திலே கிடைக்கிற பழம்,பட்சணம்னு எது கிடைச்சாலும், ஆனந்த் ஞாபகம் தான் அப்பாவுக்கு வரும்.அவற்றை யெல்லாம் கொண்டு வந்து ஆனந்திடம் ஆசையோடு  தருவார்.

அதுக்கு மேல ஆசப்பட்டா, கடைக்கு போய் வாங்கி வர, கையில் காசு கிடையாது.

பணத்தை வாரி இறைச்சு, பெரிய படிப்பெல்லாம்  படிக்க வைக்க, அப்பாவால் முடியல.

 கார்போரேஷன் பள்ளியில் படிச்சாலும், ஆனந்த் அடிப்படையில் ஒரு பிரிலியன்ட் boy. B.Sc. maths படிச்சுட்டு,அவனுக்கிருந்த I.T. மோகத்தில், புற்றீசல் போல் பரவிக் கிடந்த கம்யூட்டர் கோச்சிங் சென்டர்ல்ல சேர்ந்து, ஒரு சர்டிஃபிகேட்டையும்  வாங்கி  வச்சிட்டு, ஒவ்வொரு கம்பெனியா ஏறி இறங்கினான்.

IT இண்டஸ்டிரிக்கு, அப்போ Y2K பிரச்சினை ஒரு பெரிய சவாலா இருந்தது. அடிச்ச அந்த அலையிலே, ஆனந்த் அமெரிக்கா பக்கம் ஒதுங்கினான்.. ஒதுங்கினவன் அங்கேயே ஒட்டிண்டு அமெரிக்க பிரஜையாவும் மாறினான். 

 சொந்த வீடு, இரண்டு குழந்தைகள்னு அங்கேயே செட்டிலாயிட்டான்.

பசங்க ரெண்டு பேரும் பெரிய கிளாஸ் படிக்கிறா. இப்பல்லாம்  அப்பா அம்மாவை பார்க்க அவனால் அடிக்கடி வர முடியல.

 ஆறு மாசத்தல அப்பாவுக்கு சதாபிஷேக ஃபங்க்ஷன் வருது . அப்போ வரணும்னு பிளான் பண்ணிண்டிருந்த ஆனந்துக்கு, அப்பாவின் உடல் நிலை  அதிர்ச்சியைத் தந்தது.

ஃபினான்ஷியல் ஹெல்ப் எத்தனை பண்ணாலும், ஃபிசிகல் ஹெல்ப் இல்லன்னா என்ன பிரயோஜனம்.

திரும்ப திரும்ப யோசித்து ஒரு தீர்க்கமான முடிவெடுத்தான்

இரண்டு நாள் கழித்து ஆனந்திடம் இருந்து அம்மாவுக்கு ஃபோன் வந்தது.

“அம்மா உங்க ஃப்ளாட்டுக்கு பக்கத்துல இருக்க ஃப்ளாட், காலியா இருக்குன்னு அருண் சொன்னான்.அவன்கிட்ட சொல்லி அட்வான்ஸ் கொடுக்கச் சொல்லிட்டேன். இன்னும் இரண்டு மாசத்தில் இந்தியாவுக்கு வந்து,  கொஞ்சம் நாள் தங்கி, அப்பாவுக்கும் உனக்கும் துணையா இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் மா.

 “என்னடா இப்படி திடீர்னு முடிவு பண்ணிட்ட.  பசங்க படிப்பு என்ன ஆறது. கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணுடா”.அம்மா தயக்கத்தோடு சொன்னா.

“இப்ப இங்க அகடெமிக் இயர் முடியறது.அருண் அங்க ஒரு குளோபல் ஸ்கூல்ல அட்மிஷனுக்கு ஏற்பாடு பண்ணிட்டான்.

இங்க இருக்கிற வீட்டை வாடகைக்கு விட்டுட்டு, அங்க வரப்போறம்மா”.

அம்மாவுக்கு அவன் வேலை என்னாகுமோ.வருமானம் என்ன ஆகுமோ.இதே கவலை.கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

வந்தவுடனே ஆன்லைனில் வேலை செய்ய வீட்டில் எல்லாம் செட் பண்ணிட்டான்.அதே அமெரிக்கன் கம்பெனி அவனை இங்கிருந்து வேலை செய்ய அனு மதித்தது.

குழந்தைகள் குளோபல் ஸ்கூலில் சேரந்து ,

புதிய சூழலை புரிந்து கொண்டு புழங்கத் தொடங்கினர்.

தாத்தாவும் பாட்டியும் குழந்தைகளோடு கொஞ்சுவதும்,ஆனந்தும் அவன் மனைவியும் அவர்களுக்கு அனுசரணையாக இருப்பதும், அந்த சந்தோஷத்தில் அப்பாவின் உடல் நிலையில் மெல்ல மெல்ல முன்னேற்றம் தெரியத் தொடங்கியது.

அப்பா மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதைத் கொஞ்சம் கொஞ்ச மாக குறைத்துக் கொண்டார்.

படுக்கையை விட்டு மெல்ல எழுந்து நடக்க முயற்சி செய்தார்.அப்பாவின் முகத்தில் முன்பிருந்த இருந்த சோர்வு மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது.

” இன்னிக்கு டாக்டர்கிட்ட ரிவ்யூ இருக்கு.

சாயந்திரம் எனக்கு மீட்டிங் எதுவும் இல்லை.

போயிட்டு வந்துடலாம் பா”..ஆனந்த் அப்பாவை ரெடியாக இருக்கச் சொன்னான்.

அப்பாவும் தன்னை ஃப்ரெஷ்ஷா ஆக்கிண்டு,

ஆனந்த் அமெரிக்காவிலிருந்து வாங்கி வந்த டீ ஷர்ட் டை போட்டு, கண்ணாடி முன் நின்று அழகு பார்த்தார்.அப்பாவை இப்படி பார்த்ததும் பிரமித்த ஆனந்த்,

நார் கிழித்து போட்டது போல் படுத்திருந்த அப்பா இவ்வளவு உற்சாகத்தோடு எழுந்து நடமாடுவதை அவனால் நம்ப முடியவில்லை.

டாக்டர்  அப்பாவை செக் பண்ணி விட்டு 

“மார்வலஸ் இம்ப்ரூவ்மென்ட். ஐ திங்க் மருந்து மட்டுமில்ல.மனோ பலமும் சேர்ந்திருக்கு.நீங்கள்ளாம் கூட இருப்பது ஒரு பெரிய பலம் தானே”.

குட் ஆனந்த்.இன்னும் கொஞ்ச நாள்ல நல்லாவே குணமாயிடுவார்.கவலைப் படாதீங்க.

நீங்க சீக்கிரமே யு.எஸ். ரிடர்னாயிடலாம்”.

டாக்டர் கொடுத்த நம்பிக்கை ஆனந்திற்கு சந்தோஷத்தை தந்தது.

அப்பா பூஜை செய்த தெருக்கோடி பிள்ளையாரைத் தேடி, தினமும் காலை மாலை யென,  தவறாமல் சென்று கும்பிட்டான்.

சங்கட ஹர சதுர்த்தி அபிஷேகத்திற்கு அப்பாவுக்கு துணை நின்றதும்,அப்பாவுக்கு உடம்பு சரியில்லாத போதெல்லாம், இவனே பூஜை செய்ததும்,ஒவ்வொன்றாய் அவன் நினைவில் வர,இந்த பிள்ளையார் தானே, தன்னை வாழ்க்கையில் கை தூக்கிவிட்டவர் என எண்ணிக் கொண்டே, கண்களை இறுக மூடி, அப்பா பூரண குணமடைய மனமுருகி வேண்டினான்.

ஒரு வருடம் ஓடிவிட்டது.அப்பா நன்றாகத் நடக்கத் தொடங்கி விட்டார்.நெஞ்சு வலியும் இப்போது வருவதில்லை.

வழக்கம் போல்  ஆனந்த் அன்றும், அப்பா அருகில் அமர்ந்து,பிள்ளையார் விபூதியை அப்பாவின் நெற்றியில் பூசி,

“அப்பா நீ செஞ்சுரி அடிக்கணும்” என்று தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினான்.

அவனை மெல்ல அணைத்து,

“ஆனந்த் இனிமே எனக்கு ஒன்னும் பயமில்லப்பா.குழந்தைகளோடும்,உங்களோடும் சேர்ந்து இருந்ததல இந்த ஒரு வருஷம் ஓடினதே தெரியலப்பா.ஆமாம் ஆனந்த் நீ என்ன பண்ணப்போறே”.

“எதைச் சொல்றீங்கப்பா”

“நான் நல்லா ஸ்வஸ்தம் ஆயிட்டேன். என்னப்பத்தி இனிமே கவல வேண்டாம்ப்பா.”

நீ நல்லபடியா அமெரிக்கா திரும்பணும்.

அதுக்கு என்ன பிளான் பண்ணி இருக்கே.

நீயும் உன் புழைப்ப பார்க்கணும்ப்பா”.

“அப்பா இப்ப உனக்கு ஒரு சந்தோஷ சேதி சொல்லப்போறேன்”.

அப்பா அவனை ஆச்சர்யத்தோடு பார்த்து.

“என்ன சேதி பா.சீக்கிரம் சொல்லு”

“குழந்தைகள்ளாம், தாத்தா பாட்டியோட இங்கேயே இருக்கலாம்.அமெரிக்கா போக வேணாம்னு அடம் பிடிக்கிறாங்கப்பா.அவங்களுக்கு இந்தியாதான் ரொம்ப பிடிச்சிருக்காம்.

இந்த ஃப்ளாட்ல விளையாட நிறைய பசங்கள் இருக்காங்களாம்.எல்லா மாசமும் ஏதாவது ஒரு பண்டிகைன்னு,ஒரே சந்தோஷமா இருக்குப்பா.நாம்ப இங்கையே தங்கிடாலாம் பா. அப்படின்னு சோல்லிக்கிட்டே இருக்காங்க”. 

“என்னப்பா சொல்ற.குழந்தைகளுக்கு என்ன தெரியும்.ஏதோ சொல்றதுங்க.நீ உன் வேலைக்கு போக வேணாமா.எத்தனை நாளைக்கு இந்தியாவிலிருந்து வேலை செய்ய விடுவாங்க.”

“இல்லப்பா.நானும் அமெரிக்காவுக்கு திரும்பி போகவேணாம்னு முடிவு எடுத்துட்டன் பா”.

அப்பாவுக்கு அவன் ஏன் இப்படி சொல்றான். எதுவும் புரியல.

“ஏன்பா இந்த திடீர் முடிவு”.

“நேற்று  நம்ப பிள்ளையார் கோயிலுக்கு போனேன்.கோயிலே திறக்கல பா. கொஞ்சம் பொறுப்பெடுத்துண்டு கோயில பார்த்துக்கிற மாலி மாமாவிடம்,

ஏன் மாமா இன்னும் கோயில திறக்கலேன்னு கேட்டேன்.

“ஆனந்த் உங்கப்பா கோயில் பூஜைக்கு வராம நின்னதிலிருந்து, ஒருத்தரும் ஒழுங்கா வந்து பூஜையை பண்றதில்ல.யார் வந்தாலும் வருமானம் போதலைன்னு,விட்டுட்டு போயிடறாங்க”. 

“ஆமாம் பா.நீ எத்தனையோ முறை உங்கப்பாவை அமெரிக்காவுக்கு அழைச்ச போதும்,இந்த பிள்ளையாரை விட்டுட்டு வரவே மாட்டேன்னு பிடிவாத மா இருந்தார்.

அந்த மாதிரி மனுஷன் இனிமே கிடைக்க மாட்டங்க”.

“ஆனந்த். உங்க அப்பா பூஜை செஞ்ச வரை, இந்தப் பிரச்சனையே இல்லப்பா. வருமானத்தை பத்தி கவல படாம,பிள்ளையாரே கதின்னு இருந்தார். இப்ப வரவங்களுக்கு காசு தான்பா முக்கியம்.அவங்களைச் சொல்லியும் குத்தமில்ல.வில வாசியெல்லாம் அப்படித்தான் பா இருக்கு.

இதை எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியல”.

அவர் இயலாமையை வருத்தத்தோடு என்னிடம் சொன்ன போது பிள்ளையாரையே உற்றுப் பார்த்தேன்.

அந்த கஜநாதன் கண்கள் எனக்கு ஏதோ சேதி சொல்வது போல் தோன்றியது.

“அங்கேயே சங்கல்பம் செய்து கொண்டேன் பா”

“என்னடா சொல்ற”.அப்பா திடுக்கிட்டார்.

“நானும்  இனி அமெரிக்கா போகமாட்டேன்.இனிமே எனக்கு எல்லாமே அந்த பிள்ளையார் தான் பா.நீங்க விட்ட பூஜையை நான் தொடரப்போறேன்.எனக்கு அந்த ஆண்டவன் நிறையவே கொடுத்திருக்கான். அது போதும் பா”.என்று தன் திடமான முடிவை அப்பாவிடம் சொன்ன போது,

ஒரு நிமிடம் கண்களை இறுக மூடி “அந்த ஐங்கரன் சித்தம் அதுவா என  நினைத்து”,

 ஆனந்தத்தில் மெளனமானார் அப்பா.

Exit mobile version