அவள் விரும்பிய   வாழ்க்கை- ரா.வளர்மதி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 175 அவள் விரும்பிய   வாழ்க்கை- ரா.வளர்மதி

   மலைக்கோயில் உச்சியில் ஒரு பெண் ஆயிரம் படிகள் முட்டிப் போட்டு ஏறி மயக்கம் போட்டு விழுந்துவிட்டாள் என அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டிருக்க, அதைக் கேட்டு  கீழிருந்து ஒருவன் வேகமாக மூச்சு வாங்க ஓடினான். அவர்தான் விவேக். அவரின் மனைவி  மீனாதான் அங்கு வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருப்பவள், இவர்களுக்கு பதினைந்து ஆண்டுகளாக  குழந்தை இல்லை, அதற்காகத்தான் இந்த வேண்டுதல். விவேக்கிற்கு மீனா இப்படி உடலை வருத்தி பரிகாரம் செய்வதெல்லாம் பிடிக்காது, அதனால் தான் விவேக்கிற்கு தெரியாமலேயே மீனா தன் வேண்டுதலை செய்ய கோயிலுக்கு வந்திருப்பாள். அதை அறிந்து கொண்டவர் மீனாவை தேடித்தான் கோயிலுக்கு வந்திருப்பார்.

   விவேக் சென்று மீனாவை எழுப்ப மயக்கத்தில் இருந்த மீனா எழுந்து நான் மீண்டும் வேண்டுதலை தொடர்கிறேன் இன்னும் இருநூறு படிக்கட்டுகள் தான் உள்ளது என்று சொல்ல, விவேக் அதை தடுத்து நிறுத்தி மீனாவை தூக்கிக்கொண்டு நமக்கு கிடைக்கும் என்று இருந்தால் கிடைக்கும் அதை யாராலும் தடுக்க முடியாது என்று சொல்லிக்கொண்டே படி இறங்க ஆரம்பித்து விட்டான்.

     வீட்டிற்கு வந்தும் மீனாவிற்கு மிக சோர்வாகவும், களைப்பாகவும் இருந்ததினால் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான், அங்குதான் அவர்களுக்குக் காத்திருந்தது மிகப்பெரிய மாற்றம், மீனாவை  பரிசோதித்த மருத்துவர்  இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார், அவ்வளவுதான் விவேக் சந்தோஷத்தில் இந்த செய்தியை கொண்டாடித் தீர்த்துவிட்டான். அன்றிலிருந்து மீனாவை குழந்தை போல் பார்த்துக்கொண்டான் ஒன்பது மாதத்தில் வளைகாப்பு செய்தும் மீனாவை அம்மா வீட்டிற்கு  அனுப்ப விரும்பவில்லை தன்னுனே வைத்த பாசமாக பார்த்துக்கொண்டான். அவர்கள் இருவரும் குழந்தையின் வருகைக்காக எதிர்பார்த்து  காத்திருந்தனர்.  அந்த நாளும் வந்தது மீனாவிற்கும் விவேக்கிற்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் இந்த சந்தோஷம் நிலையானதில்லை என்று அப்பொழுது அவர்களுக்கு தெரியாது. குழந்தைக்கு இனியன் என்று அழகான பெயர் வைத்தான்.      

     இனியனுக்கு 7 வயது நெருங்கியது, இனியன் ஆண் குழந்தைகளைப்  போல் இல்லாமல் பெண் குழந்தைகளைப் போல பாவனை செய்து கொண்டிருந்தான்,  அவன் விளையாட்டாக செய்வதாக நினைத்துக்கொண்டு விட்டுவிட்டனர்,  அதன் பின்னர்  காலங்கள் செல்லச்செல்ல அவன் உடை, நடை, பாவனைகள்  எல்லாம் பெண்களைப் போல் மாறிக் கொண்டிருப்பதை அவன் பெற்றோர்கள் உணர்ந்தனர், இதைப்பற்றி மீனா இனியனைக் கண்டித்த போது தனக்கு இவ்வாறு இருப்பது தான் பிடித்திருக்கிறது என்று கூறிவிட்டு ஓடிவிட்டான்.  

    இதை அறிந்த ஊர் மக்கள் அடேய்! ஆம்பள பிள்ளையை பெத்துட்டனு பீத்திட்டு திரிஞ்சானே அது பொம்பள புள்ள மாதிரி பண்ணிட்டு இருக்குதுடானு, விவேக்கை நக்கலடித்து சிரித்துப்பேச கடுங்கோபத்தில் வீடு வந்த விவேக் இனியனை கடுமையாக அடித்துவிட்டான்.

     விவேக்கின் அடிக்குப் பயந்து வீட்டை விட்டு வெளியே செல்ல முடிவு செய்த இனியன், அன்றிரவே வீட்டை விட்டு வெளியே சென்றான். பசியில் என்ன செய்வதென்று அறியாமல் பலரிடம் வேலை கேட்டான், எவரும் அவனுக்கு வேலை கொடுக்க முன்வரவில்லை. மயக்கத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த இனியனை கண்காணித்த காவல் அதிகாரி ஒருவர் அவனிடம் விசாரித்த பொழுது அவன் உண்மையைக் கூற மறுத்துவிட்டான். பின்பு அவனை ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டார். அந்த ஆசிரமத்தில் அவன் சற்று வித்தியாசமாக நடந்து கொள்வதை உணர்ந்த குழந்தைகள் அவனுடன் பழக விரும்பவில்லை,  அதனால் தனியாகவே வளர்ந்தான்.   

   தனது பெயரை இனியனிலிருந்து இனியாவாக மாற்றிக்கொண்டான், அங்கிருந்து இனியாவின் வாழ்க்கை ஆரம்பமாகியது.  இனியா  சிறு வயதில் இருந்தே படிப்பில் அதிகம் ஆர்வம் கொண்டவளாக இருந்தாள், அந்த ஆசிரமத்தின் உதவியுடன் தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டாள்.  அந்த ஆசிரமத்தில் யாரும் அவளிடம் அதிக நெருக்கம் காட்டவில்லை, அதனால் அவள் அந்த ஆசிரமத்தில் அதற்குமேல் தங்குவதற்கு  விரும்பவில்லை.

    தனது பள்ளிப்படிப்பு முடிந்ததும் அந்த  ஆசிரமத்தை விட்டு வெளியேறினாள். வெளியேறிய அவளுக்கு  புது உலகம் காத்திருந்தது, அவளைப் போல மாறியவர்கள் பலரை அவள் கண்டாள், ஆனால் அவர்கள் வாழும் வாழ்க்கை முறை சாதாரண மனிதர்களைப் போல இல்லாமல் மாறுபட்டு இருந்ததினால் அவர்கள் வாழும் வாழ்க்கை முறையையும் பழக்கவழக்கங்களையும் சாதாரண மனிதர்கள் போல் மாற்ற விரும்பினால். 

    இனியா அரவாணிகளின் கூட்டத்தில் ஒருத்தியானாள், தான் மேற்படிப்பு படிக்க விரும்புவதாக அவர்களிடம் கூறினாள்,  அவர்கள் அனைவரும் சேர்ந்து இனியாவின் கல்லூரி படிப்பிற்கு உதவினர், அதுமட்டுமில்லாமல் கல்லூரி சென்று வந்த பின்பு தையல் வேலை செய்து அதில் வரும் பணத்தையும் தனது படிப்பிற்கு உபயோகப்படுத்தினாள்.

   கல்லூரி படிப்பை முடித்த இனியாவுக்கு தனியார் கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்தது, அங்கேயும் அவளை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை, அவளை அவமானப்படுத்தினர், கேலியாகப் பேசி அவள் உருவத்தையும், அவள் செய்கைகளையும் கொச்சைப்படுத்தினர். அந்த அவமானங்களை அவள் சற்று பெரிதாக கூட நினைக்கவில்லை, ஏனென்றால் அது அவளுக்கு பழகிப்போனதுதான்.

   அவளுக்குள் எப்பொழுதும் ஒரு எண்ணம் இருந்துகொண்டே இருந்தது, நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கு மட்டும் ஏன்? இந்த நிலைமை இதை மாற்ற வேண்டும் இதை எவ்வாறு மாற்றுவது என்று யோசிக்க ஆரம்பித்தாள். இதை புரிய வைக்க இனியா பலரிடம் போராடினாள். யாரும் அதை மதிக்காமல் அனைவரும் இவளை ஒரு கேலியாகத்தான் பார்த்தார்கள்.

   இனியா தான் ஒரு உயர்ந்த பதவிக்கு செல்ல வேண்டும், அவ்வாறு சென்றால் தான், தன் இன மக்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை பெற்றுத்தர முடியும் என்று முடிவு செய்தாள். அரவாணி  உயர்ந்த பதவிக்கு செல்வதா என்ற கேலிப் பேச்சுகளை சுமந்து கொண்டே  இரவு, பகல் பாராமல் பலரின் உதவியை நாடி படித்து தேர்வில் வெற்றி பெற்றாள்.

 ஒரு மாவட்டத்தின் கலெக்டர் பதவியில் அமர்ந்தாள். அன்று! அவளை யாரும் உதாசீனப்படுத்தவில்லை, அவள் வார்த்தைகளுக்காக அனைவரும் காத்திருந்தனர்,  அன்று அவளை அரவாணி என்று கேலி செய்த மக்கள் இன்று அவளை கையெடுத்துக் கும்பிடும் நிலைமைக்கு அவள் உயர்ந்தாள், அன்று அவளை புறக்கணித்த மக்கள் இன்று அவள் உதவியை நாடி காத்திருந்தனர்.   

        இனியாவுக்கு சிறிது கூட தற்பெருமையில்லை, தன்னை நாடி வருபவர்கள் அனைவருக்கும் உதவி செய்தாள். அதுமட்டுமல்லாமல் தனது கனவான அரவாணி மக்களுக்கு அடையாளம் கொடுத்து அனாதையாக வாழும் அவர்கள் சுய தொழில் செய்வதற்கு வழி செய்து கொடுத்தாள்,  தன் மக்கள் மட்டுமல்லாமல் ஏழைகள், அனாதைக் குழந்தைகள், குழந்தைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் என அனைவரையும் அரவணைத்துக்கொண்டு கைவிடப்பட்டோர் ஆசிரமம் என்று ஒன்றை ஆரம்பித்தாள்l  

   அன்று ஒரு பெற்றோரால் கைவிடப்பட்ட இனியாவுக்கு இன்று ஆயிரம் பெற்றோர்கள், சகோதர சகோதரிகள் என உறவுகள் சூழ வாழ்ந்தாள்,  அந்த ஆசிரமத்தில் அரவாணிகள் ஒதுக்கப்படவில்லை, அவர்களுக்கான அன்பு அந்த ஆசிரமத்தில் கிடைத்தது எல்லோரோடும் ஒன்றிணைந்து வாழும் ஆனந்தம் அங்கு அவர்களுக்கு கிடைத்தது, இனியா விரும்பிய  வாழ்க்கையை அங்கு வாழ்பவர்களுக்கு கொடுத்தாள்.

    ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருந்த இனியாவின் வாழ்க்கையில் பெரிய பிரச்சனை ஒன்று வந்தது, அவளிடம் பணிந்து வாழ்வதற்கு சிலர் விரும்பவில்லை, காரணம் அவள் அரவாணி என்பதுதான்  “ ஊருக்காக வாழ்பவர்கள் எவருக்குமே வெகு விரைவில் கெட்டது வந்து சேர்ந்துவிடுகிறது”  அவள் யாரிடமோ லஞ்சம் வாங்குவது போல ஒரு புகைப்படக் காட்சி சமூகவலைதளத்தில் பரவியது. அதற்கு அனைவரும்  இவர்கள் குணமே இதுதான், இவர்கள் பணத்திற்காக என்னவேண்டுமானாலும் செய்வார்கள் என கேவலமாக பழித்துப் பேசினர், இனியாவின் பதவி பறிக்கப்பட்டது.

இனியா  அதற்காக கவலைப்படவில்லை, தன்னைச் சுற்றி இருப்பவர்களை எவ்வாறு காப்பாற்றுவேன் என்று சோர்ந்து போனாள், ஆனால் முடங்கிப்போகவில்லை.  தன் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபிக்க போராடினால், ஆனால் அதை நிரூபிக்க அவளுக்கு யாரும் உதவவில்லை, காரணம் உயர்ந்த பதவியில் இருக்கும் யாரும் அவளை விரும்பவில்லை. இவ்வளவு பிரச்சினைகளையும் சுமந்துகொண்டு தன்னைச் சுற்றியிருப்பவர்கள் உணவிற்குக் கூட கஷ்டப்படும் நிலைமை வந்ததினால் இனியா  மனதளவில் நொறுங்கிப் போனாள். பலரின் உதவிகளைப் பெற்று அவர்களின் தேவைகளை முடிந்த அளவில் நிறைவேற்றிக் கொண்டே வந்தாள்,  இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென போராடினாள்.

   அவளிடம் உதவி பெற்ற சில நல்ல உள்ளங்கள்  அவளைச் சுற்றி நடக்கும் விஷயங்களை அவளிடம் கூறினர்,  உங்களின் வளர்ச்சியை விரும்பாத உங்களைச் சுற்றி இருக்கும் நண்பர்கள் தான்  இவ்வாறு செய்தது என்று அவளுக்கு உணர்த்தினர்.  நண்பர்கள் செய்த துரோகத்தை நினைத்து நொந்து போனாள் அந்த துரோகத்தில் இருந்து எப்படியாவது வெளியே வந்தே தீர வேண்டுமென்று முயற்சி செய்தாள். அப்பொழுதுதான் அவளுக்கு தெரிய வந்தது தப்பான வழிகளில் சில நண்பர்கள் உதவி கேட்கும் பொழுது அவள் அதை மறுத்து விட்டாள், அதனால் தான் இவள் மீது பொய் குற்றச்சாட்டு ஆக போலி வீடியோ ஒன்றை தயாரித்து வெளியிட்டனர் என்று. நெருங்கிய நண்பர்களே இவ்வாறு செய்ததினால் இனியா மனதளவில் மிகவும் மெலிந்து போனாள்.

  அவர்கள் அனைவரையும் வீட்டிற்கு வரவழைத்த இனியா அவர்களிடம் தனது வேலை பறி போனதால் தான் மிகவும் கஷ்டமான நிலையில் இருப்பதாகவும், தன்னை சுற்றி இருப்பவர்கள் உணவுக்கே கஷ்டப்படும் நிலையில் இருப்பதாகவும், அதனால் தனது வேலையை திரும்பப் பெற்றுத்தந்தால் தங்களுக்கு நான் என்றும் நன்றிக்கடன் உடையவளாக இருப்பேன் என்றும் கூறினாள். அதற்கு அவர்கள் நாங்கள் சொல்வதைக் கேட்டு ஒழுங்காக நடந்திருந்தால் உனக்கு இந்த நிலைமை வந்திருக்காது, உனக்கு தேவைப்படும் அளவிற்கு மீறிய பணத்தை நீ பெற்றிருப்பாய், இப்பொழுது உன்னுடைய இந்த நிலைமைக்கு நீ மட்டும் தான் காரணம் உனக்கு நாங்கள் உதவ வேண்டுமென்றால் நாங்கள் சொல்வதை நீ செய்ய வேண்டும், முதலில் நாங்கள் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் கையெழுத்து கேட்டால் எதற்கு என்று காரணம் கேட்காமல் கையெழுத்து போட வேண்டும், எங்களுக்கு தேவைப்படும் அனைத்து இடங்களிலும் நீ ஆதரவு தருவேன் என சத்தியம் செய்து தர வேண்டும். மற்றொன்று நீ செய்த தவறுக்காக எங்கள் அனைவர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டுமென கூறினர்.

    இனியா ஒப்புக்கொண்டு அனைவர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டாள், சத்தியமும் செய்து கொடுத்தாள். நினைத்தது நிறைவேறி விட்டது என்ற ஆனந்தத்தில் சந்தோஷமாக சிரித்துக்கொண்டே நக்கலாக இனியாவை பார்த்து இனிமேல் நீ, எங்களுக்கு அடிமை இப்பொழுது தெரிந்திருக்கும் எங்களது அருமை, நீ செய்த சிறிய தவறுக்கு நாங்கள் இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்து விட்டோம்,  இனியும் எங்களை மீறி ஏதாவது செய்தால் உன்னை அடையாளம் தெரியாமல் அழித்து விடுவோமென மிரட்டி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றனர்.

  வீடு திரும்பும் முன்னரே அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது,  அவர்கள் பேசியது அனைத்தையும் வீடியோ எடுத்துக்கொண்ட இனியா அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டாள். இனியாவை அவர்கள் மிரட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வெகுவிரைவாக பரவிக்கொண்டிருந்தது, அனைவரும் இனியாவிற்கு ஆதரவாக பேச ஆரம்பித்துவிட்டனர். அவர்களை கைது செய்யுமாறு போராட்டங்களும் நடைபெற்றது, அவளை தப்பாக பேசியவர்கள் அனைவரும் அவள் மீது தப்பில்லை என்று உணர்ந்தவுடன் அவளிடம் மன்னிப்பு கேட்டனர், அவளின் பதவியை திரும்பத் தருமாறு அரசிடம் பரிந்துரைத்தனர்.

      அவளுக்கு துரோகம் செய்த நண்பர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர், அவர்களை சந்திக்கச் சென்ற இனியாள், நீங்கள் எனக்கு செய்த துரோகத்திற்கு தண்டனை அனுபவிக்கப் போகிறீர்கள், நம்பியவர்களை என்று ஏமாற்றாதீர்கள் அப்படி நம்பியவர்களை ஏமாற்றி பெரும் வெற்றி என்றும் நிலைத்திருக்காது என்று கூறினாள். அதற்கு அவர்கள் எப்படியாவது எங்களை காப்பாற்றி விடு, நீ எங்களுக்கு சத்தியம் செய்திருக்கிறாய், எங்களின் கஷ்டமான நிலைமைகளில் நீ எங்களுக்கு உதவுவாய் என்று,  அதற்கு இனியாள் சிரித்துக் கொண்டே எனது சத்தியம் உண்மையாக இருப்பவர்களுக்கும், நேர்மையாக இருப்பவர்களுக்கும் தான் என்று கூறி விட்டு வெளியே சென்றாள். இனியாவின் இந்த வெற்றியை அவளுடன் இருப்பவர்கள் கோலாகலமாக கொண்டாடினர், அவர்களுக்கு வயிறு நிறைய உணவு கிடைத்தது மனது நிறைய அன்பு கிடைத்தது, இனியாவின் வாழ்க்கையை நிறைவாக சென்று கொண்டிருந்தது.         

       இனியாவின் கனவு வாழ்க்கை நிறைவேறியும் அவளது வாழ்க்கையில் ஏதோ ஒரு குறை இருப்பதாகவே இருந்தது, காரணம் அவளுடன் அவள் அப்பா அம்மா இல்லை. ஆயிரம் உறவுகள் கூட இருந்தாலும்,  நம் பெற்றோர்கள்  கூட இருந்தால் அது ஒரு ஆனந்தம் தான். அவர்களைப் பார்ப்பதற்காக இனியா தனது சொந்த கிராமத்திற்கு சென்றாள், அங்கு சென்று பார்த்த பொழுது அவளின் பெற்றோர்கள் அங்கு இல்லை, அங்கு இருப்பவர்களிடம் அதைப் பற்றி விசாரித்த பொழுது,  இனியா வீட்டைவிட்டு வெளியே சென்ற அவமானம் தாங்காமல் அவளின் பெற்றோர்கள் யாரிடமும் பேசாமல், வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்ததினால், வறுமை அதிகமாகி உணவுக்கு கூட கஷ்டப்படும் நிலைமை வந்ததினால், தங்கள் குடியிருக்கும் வீட்டை விற்றுவிட்டு, அந்த கிராமத்தின் எல்லையில் ஒரு ஓலைக் குடிசையில் தங்கி இருப்பதாக கூறினர்.

    தன்னால் தன் பெற்றோர்கள்  பெற்ற கஷ்டத்தை கேட்ட இனியா கண்ணீர்விட்டாள். அவர்களைக் காண வெகுவிரைவாக சென்ற இனியா வயது முதிர்ந்த இருவரும் அந்த ஓலைக் குடிசையில் ஓரத்தில் அமர்ந்து இருக்க அவர்களை நோக்கிச் சென்றாள்.

    யாரோ! ஒரு உயர்ந்த அதிகாரி வருவதாக எங்களுக்கு ஏதாவது அரசாங்கம் உதவி செய்து கொடுங்கமா, நாங்கள் அனாதைகள் எப்படியாவது எங்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க உதவி செய்யுங்களம்மா,  உணவுக்கு கூட கஷ்டப்படுகிறோம் என்று தனது மகள் தான் வருகிறாள் என்று அறியாத தந்தை அவளை கையெடுத்து வணங்கினார்.

   மாலை மாலையாய் கண்ணீருடன் அவரின் காலில் விழுந்தாள், நான் தான் உங்கள் மகன் இனியன் என்னை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா?  வரம் வாங்கி பெற்றவர்களுக்கு வரமாக வந்தவள் இந்த நிலைமையை கொடுத்து விட்டேனே என அழுது தீர்த்தாள்.  தான் பத்துமாதம் சுமந்து பெற்ற குழந்தைதான் என்று அறிந்துகொண்ட   மீனா அவளை அணைத்துக்  கொண்டாள்,   நான் பத்து மாதம் சுமந்து பெற்ற தங்கமே யாருக்காக உன்னை விரட்டினோமோ, அவர்களே எங்களின் கஷ்டமான நிலைமைகளில் உதவவில்லை,  அவள் இல்லாமல் அவர்கள் பெற்ற கஷ்டத்தை சொல்லி தீர்த்துவிட்டாள்  கண்ணீராக.

விவேக்கால் அழுக முடியவில்லை, ஆனந்தத்தில் பூரித்துப் போனான், நான் வேண்டாம் என்று விரட்டிய உறவு இன்று எனக்காக வளர்ந்து வேர்பிடித்து ஆலமரமாக வந்து நிற்கிறது என்று வார்த்தைகளால் தனது சந்தோஷத்தை அடிக்கி வைத்துவிட்டான் ஊர்க்காரர்களிடம். அவளின் பெற்றோர்கள் அவளை இனியவாகவே ஏற்றுக்கொண்டனர். தனது பெற்றோர்களை இழிவாக பேசி ஒதுக்கியவர்கள் முன்பு அவர்களை ராஜ மரியாதையுடன் அரசாங்க வண்டியில் அழைத்துச் சென்றாள். தனது தாயின் மடியில் படுத்துக்கொண்டு தனது தந்தையின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள் அன்று நிறைவேறியது அவள் விரும்பிய வாழ்க்கை……..

                                                                                              

Exit mobile version