இரிடோஃபோபியா-சு. நாகசரஸ்வதி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 181 இரிடோஃபோபியா-சு. நாகசரஸ்வதி

அன்று அபிநயாவிற்கு மிக முக்கியமான ஒரு நாள். அவள் காதலிக்கும் தனிப்பெருந்துணையை வீட்டில் உள்ள அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப் போகிறாள். திருவான்மியூர் மூன்றாவது சீவார்ட் ரோட்டில், இரு பெரிய பங்களாக்கள் நடுவில் இருக்கும் ஒரு லோ-ரைஸ் குடியிருப்பின் இரண்டாம் தளத்தில் அமைந்திருக்கும் அபிநயாவின் வீடே அந்த நிகழ்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது.

அபி எப்பொழுதும் சீக்கிரம் எழுந்து கடல், காற்று, கதிரவனை தனது பால்கனியில் இருந்து தரிசனம் செய்து விட்டுத்தான் தனது நாளைத்  தொடங்குவாள். அன்றும் அதே போல எழுந்து மூவரையும் முத்தமிட்டுக் குளிக்கச் சென்று கிளம்புகிறாள்.

நேரம் காலை 8.30 – வெள்ளை நிற சல்வாரோடு பல வண்ணம் பொதிந்த ஒரு துப்பாட்டாவை அணிந்து கொண்டு வானவில்லாய் தன் அறையில் இருந்து வெளியே வருகிறாள்.

“ம்மா.. ம்மா” என்று அடுப்பங்கரை நோக்கிச் சென்று “என்ன வாசுகி இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?” என்று அம்மாவிடம் கேட்கிறாள்.

“ஸ்பெஷலாம் ஸ்பெஷல்.. எவ்ளோ நாள் படிச்சு படிச்சு சொல்லிருப்பேன். இந்த காதல் கத்திரிக்காய்லாம் ஏமாத்து வேலை. அதுல விழுந்துடாதன்னு. ஆனா நீ ஏமாத்திட்ட. கேட்டா மனச பாத்தும் காதல் வரும்ன்னு எனக்கே கிளாஸ் எடுப்ப. எனக்குத் தெரியாதா ஆம்பளைங்கப்  பத்தி. எப்போ சேலை விலகும், கூட்டத்துல எப்படி உரசலாம்ன்னு தான் அவங்க மனசு முதல்ல சிந்திக்கும். இந்த காலத்துப் பொண்ணுங்க காதல்ங்கிர பேருல எதையும் ஈஸியா அலோ பண்ணிட்ரீங்க..இதெல்லாம் பசங்களுக்கு ரொம்ப வசதியா போச்சு. என்னமோ போ. நல்லா இருந்தா சரின்னு” வாசுகி தன் மகளை ஸ்பெஷலாய் திட்டித் தீர்க்க அபி, “பாருங்க டாடி” என்று சிணுங்கியபடியே ஹாலில் இருக்கும் அப்பாவிடம் சென்று சமாதான வார்த்தைத்  தேடுகிறாள்.

கதிரவன். அபியின் அப்பா. தன் மகளின் கேசத்தைச் செல்லமாக கோதியபடி “அவ கிடக்குறா.. வின்டேஜ் மம்மி. இப்போ உள்ள பசங்கள்லாம் ரொம்ப ஸ்மார்ட்ன்னு அவளுக்கு எங்க தெரியப் போகுது. அப்பா சொல்றது ரொம்ப சிம்பிள் அபி. இந்த காதல், ஜாதி இதுக்குலாம் எதிரான ஆள் நான் இல்ல. பட் நம்ம தேர்ந்தெடுக்குற துணையோட ஸ்டேட்டஸ் ரொம்ப முக்கியம். ஏன்னா கல்யாணம்ங்கிறது “எம்பயர் பில்டிங்” மாதிரி. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கப்போற முதல் படி. அதுல பணம் ரொம்ப முக்கியம். ஆக்ச்சுவரியல் சயின்ஸ்ல (Actuarial Science) பட்டம் வாங்கிருக்கிற உனக்கு இது நல்லாவே தெரிஞ்சிருக்கும்ன்னு நம்புறேன். புள்ளியியல யூஸ் செஞ்சு கணக்குல மட்டும் இல்ல, வாழ்க்கையில உள்ள சிக்கலையும் தீர்க்க உன்னால முடியும். சோ, உன்னோட முடிவுல ஸ்டேட்டஸ் ஒரு பெரும்பங்கு வகிக்கணும். அவ்ளோதான் அபி”.

“என்னடா கதிர். ஸ்டேட்டஸ் போதும்ன்னு இப்படி பொத்தாம் பொதுவா சொல்லிட்ட. நம்ம ஆளுங்களா இருக்க வேண்டாமா” என சொல்லியபடியே கோவில் சென்று திரும்பிய அபியின் தாத்தாவும் பாட்டியும் பேத்தி அபியை நோக்கிச் செல்கிறார்கள்.

“அபி. இந்தா. மருந்தீஸ்வரர் கோவில் திருநீறு. எந்த குறையும் இல்லாம நல்லா நீ வாழனும் கண்ணு” என்று பாட்டி விபூதியை பூசிவிட “தேங்க்ஸ் பாட்டி” என்று அபி பாட்டியின் கன்னத்தில்  ஒரு முத்தம் இடுகிறாள்.

குடும்பமே தங்களது எதிர்பார்ப்புகளை அபியிடம் சொல்லிக்கொண்டிருக்க காலிங் பெல் சத்தம் கேட்கிறது. அபியின் தம்பி அகில் ஓடிச் சென்று திறக்கிறான். “அய்.. வாங்க மிருது அக்கா” ..

“ஒரு நிமிஷம் அகில். கால் வந்திருச்சு. பேசிட்டு வரேன். நீ உள்ள போ” ன்னு மிருது மிருதுவாகவே அகிலிடம் சொல்கிறாள்.

மிருதுவைப் பார்த்த அத்தனைப் பேரும் குடும்பத்தில் இப்பொழுது  யூகித்து விட்டார்கள் அபியின் காதல் யாரெனெ.

ஏங்க..நான் முன்னாடியே சொன்னேன்ல இந்த மிருது பொண்ணோட அண்ணன் சுந்தர் கூடத்தான் இவ சில சமயம் வண்டில வந்து இறங்குவா. நான் கேட்டதுக்கு ஜஸ்ட் பிரெண்ட்ஸ்ன்னு சொல்லிட்டு போய்டுவா. அந்த பையன்ன எனக்கு சுத்தமா பிடிக்காது. நிறைய தாடி, காதுல கடுக்கன், கைல காப்புன்னு ரவுடி மாதிரி..வேண்டாம்ன்னு நீங்க ஸ்ட்ரிக்டா சொல்லிடுங்க உங்க பொண்ணுகிட்ட

சும்மா இருடி.. இப்போ இதான் பேஷன். மிருதுவோட அப்பாக்கு இந்த ஊர்ல ரெண்டு பெரிய எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன் இருக்கு. அவங்க ஸ்டேட்டஸ் ரொம்ப பெருசு. அபியோட சாய்ஸ் கரெக்ட் தான். சமூகத்துல ஒரு அந்தஸ்து வேணும்னா சுந்தர் பெஸ்ட் சாய்ஸ் தான் அபிக்கு.

டேய் கதிர்.. இந்த மிருது பொண்ணு நம்ம ஆளுங்க தான.

ஆமப்பா.. நாலு மாசத்துக்கு முன்னாடி அபி லவ் மேட்டர் சொல்றதுக்கு முன்ன அவளுக்கு நம்ம கம்யூனிட்டி மேட்ரிமோனி ஆபீஸ்ல ரிஜிஸ்டர் செய்யப் போனேன். அங்க மிருது அப்பாவும் வந்தாரு. மிருது அப்பா நம்ம ஆளுங்க. அம்மா வேற போல. அவங்க லவ் மேரேஜ்.

ஓ.. ஓ .. சரி .. அப்போ அப்பாவோட வழக்கப்படிதான் பையன் வளந்திருப்பான் .. அப்போ பிரச்சனை இல்லடா..

மிருது பேசிட்டு வருவதற்குள் வீட்டிற்குள் ஒரு மினி மாநாடே நடந்து முடிந்திருந்தது.

ஹாய் அபி. ஹாய் ஆல்…எப்படி இருக்கீங்க.. ஆண்ட்டி, அங்கிள் அண்ட் தாத்தா பாட்டி ..

“நல்லா இருக்கோம் மிருது.. உங்க அண்ணன் எங்க” ன்னு கதிர் கேட்க..

அண்ணன் எதுக்கு அங்கிள்? ன்னு மிருது பதில் கேள்வி கேட்க

இங்க நடக்கிறத புரிஞ்சிகிட்ட  அபி .. “அப்பா, அம்மா நான் ரொம்ப நெர்வஸா இருக்கேன்.. இழுக்க முடியாது. வேற எதுவும் பேச வேண்டாம்.. நான் சொல்றேன்” ன்னு ரொம்ப பதட்டமா பேச ஆரம்பிக்கிறா..

“மை டியர் பேமிலி மெம்பெர்ஸ்.. திஸ் இஸ் மிருதுளா.உங்க எல்லாத்துக்கும் இவள தெரிஞ்சிருக்கும். நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்க போறோம்”

அபி சொல்லிய அடுத்த வினாடியே ரெண்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கிற கடல் தண்ணி முழுசும் சுனாமியா தான் வீட்டுக்குள்ள வந்த மாதிரி அத்தனை பேரு முகத்திலயும் ஒரு பெரும்பயம்.

கதிர் ரொம்ப அதிர்ச்சியா “வாட் ..என்ன சொல்ற அபி.. ஆர் யூ சீரியஸ்?” ன்னு கேக்க, “யெஸ் டாட். வீ ஆர் லெஸ்பியன்ஸ். நாங்க ரெண்டு பேரும் திருமணம் செஞ்சுக்கலாம்ன்னு இருக்கிறோம். எனக்குத் தெரியும் உங்களுக்கெல்லாம் ரொம்ப அதிர்ச்சியா இருக்கும்ன்னு. பட் உண்மை இதான்”

வாசுகி ரொம்ப மெதுவா தன் மகள் அருகில் வந்து பாவமாய் “அபி.. நாங்க போட்ட கண்டிஷன்லாம் மனசுல வச்சு எங்கள பழி வாங்கணும்னு செய்றியா?  இல்ல எதுவும் எங்க மேல வெறுப்பா?” ன்னு ரொம்ப நிதானமா கேட்கிறாள்.

இல்லம்மா.. அது வந்து…

“என்ன அபி.. அது வந்து… இப்போ இருக்கிற இளசுங்கலாம் புரட்சின்னு ஏதோ செஞ்சுட்டு இருக்காங்க.. அப்பிடி எதுவும் செய்யணும்ன்னு இறங்கிட்டியா அபி”ன்னு தாத்தா கேட்க .. எல்லோர் கேள்விக்கும் பதில் சொல்லும் விதமாய் அபி நிமிர்ந்து தயார் ஆகிறாள்.

இது புரட்சி இல்ல தாத்தா. உணர்ச்சி தான். இந்த உலகத்துல எத்தனையோ புரட்சி நடந்து அதுக்கு தீர்வும் கிடைச்சிருக்கு.. ஆனா எங்களோடது இன்னும் புரட்சியாவே இருக்கு. தீர்வு இருந்தும் அத ஏத்துக்க சமூகம் இடம் கொடுக்கல.

அம்மா நீங்க அமைச்ச கட்டுப்பாடோ, கண்டிப்போ, அச்சுறுத்தலோ நான் இந்த முடிவு எடுக்க காரணமில்ல. முதல்ல எனக்கு பெண்கள் மேல ஈர்ப்பு வந்தப்போ நான் கூட என்னன்னே புரியாம சாதாரணமா அழகியல் சார்ந்த ஈர்ப்புன்னு தான் நினச்சேன். ஆனா போகப்போகதான் புரிஞ்சது இது எஸ்ட்டேர்னல் ஃபாக்டர்ஸ்ன்னால வர்றது இல்ல நம்ம உடம்புல நடக்கிற வேதியியல் மாற்றம்ன்னு. எனக்கே இத ஏத்துக்க கொஞ்ச நாள் ஆச்சு மம்மி.

அப்பா குறுக்கிட்டு “இது லீகல் இல்லம்மா.. அப்புறம் நீங்க ரெண்டு பேரும் ஒரு பையனா பாத்து திருமணம் செஞ்சுக்கிட்டா இந்த நினைப்பு தானா போய்டும்.” ன்னு அறிவுரை வழங்க முற்பட்டார்.

அபியோ “இல்லப்பா அந்த ஸ்டேஜ்லாம் நாங்க தாண்டிட்டோம். நீங்க சொல்ற மாதிரி நாங்க வேற கல்யாணம் தனித்தனியா பண்ணிக்கலாம்ப்பா. ஆனா எங்களுக்கு அதுல நிம்மதியோ மகிழ்ச்சியோ ரொம்ப நிலைக்காது. அப்புறம் தன்பாலின உறவு குற்றம்ங்கிற 377-வது சட்டப்பிரிவில  திருத்தம் செஞ்சு , அது சட்டப்படி குற்றமில்லன்னு உச்ச நீதிமன்றம் 2018லேயே தீர்ப்பளிச்சது. இப்போ இங்க இது லீகல்ப்பா”. சட்டத்த பாத்து பயப்பட தேவை இல்ல இங்க.. ஆனா சமூகம் எங்கள பாத்து ரொம்ப பயப்படுது.

ஏன்மா அபி.. உனக்கு நல்ல இடத்துல கல்யாணம் ஆகி நான் பூட்டி ஆகணும்னு எவ்ளோ ஆச வச்சிருந்தேன் தெரியுமான்னு கண்களில் நீர் மல்க அபியின் பாட்டி கூறினார்.

அய்யோ பாட்டி சில் !! இப்போவும் நீ பூட்டி ஆகலாம். நானோ இல்லேன்னா மிருதுவோ ஸ்பெர்ம் டோனர் மூலமா குழந்தை பெத்துக்கலாம். நீ அத கொஞ்சலாம். உனக்கு ஒன்னுத்  தெரியுமா? பின்லாந்து பிரதமர் சன்னா மரின் ஒரே பாலினப் பெற்றோருக்கு பிறந்தவங்க தான். அவங்க ஒரு பேட்டியில சொல்லிருந்தாங்க – ஒரு குடும்பமா எங்கள யாருமே மதிக்கல. சாதாரணமா நடத்தல. ஆனா  இந்தச் சூழ்நிலைகளுக்காக நான் வருத்தப்பட்டிருக்கிறேனே தவிர, என் குடும்பம் குறித்து எப்போதும் நான் கவலைப்பட்டதில்லைன்னு..சோ யாருக்குத் தெரியும் நாளைக்கு உன் கொள்ளுப்பேத்தி கூட பெரிய பிரதமரா வருவா.

நிறுத்து அபி. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழுறது தான் இல்லறம். ஒரு பொண்ணும் இன்னொரு பொண்ணும் எப்படி தங்களோட தேவைகள பூர்த்தி செய்ய முடியும். எப்படி பாத்துக்க முடியும். உனக்கு செல்லம் கொடுத்தது ரொம்ப தப்பா போச்சு. வீட்ல பெரிய மனுஷியா நான் இருந்தும் இப்படி நடந்திருக்குன்னு நாலு பேரு என்ன காரித் துப்புவாங்க..

பாட்டி நீ ரொம்ப எமோஷனல் ஆகுற. எனக்குத் தெரியும் உங்களுக்கு ரொம்ப டைம் தேவைப்படும் இத டைஜஸ்ட் பண்ண. பட் எங்கள தள்ளி வச்சு வேற்றுகிரக வாசியா பாக்காம எப்போவும் போல குடும்பத்தோட இருக்க நீங்களும் மிருது பேமிலியும் எங்கள ஏத்துக்கனும். இது கொலைக்குத்தம் பண்ண அளவுக்கு ஒரு பாவம் இல்ல. தப்பு செஞ்ச குற்றவாளி மாதிரி எங்கள பாக்காதீங்க.

அம்மா நீ நினைக்கிற மாதிரி பணம், குணம், இனம்ன்னு வெறுப்பு ஏற்பட்டு இது எங்களுக்குள்ள நடக்கல. எங்களுக்குள்ள நடந்த ஹார்மோனல் மாற்றம் தான். முதல்ல இத நானே ரொம்ப அவமானமா நினச்சேன். ஆனா அதையும் மீறி எனக்குள்ள இந்த மாற்றம் நடக்கும்போது அத பிடிச்சு ஏத்துக்க தோணுச்சு. உங்ககிட்டலாம் சொல்ல ரொம்ப பயந்தேன். ஆனா இருபது வருஷத்துக்கு மேல பழகின என் குடும்பம் என்ன ஏத்துக்கிட்டா இந்த சமூகம் நிச்சயம் ஏத்துக்கும்ன்னு நம்புறேன். நீ, அப்பா, தாத்தா, பாட்டி, அகில் எல்லாரும் சாதாரணமா பாத்தீங்கன்னா எங்களால நிச்சயம் வாழ முடியும். நாங்க ஒரு மழைத்துளி மாதிரிம்மா. நீங்கல்லாம் பிரபஞ்சத்துல இருக்கிற சூரிய வெளிச்சம். உங்க அன்பு எங்க மேல பட்டா நாங்க அழகான வானவில் ஆய்டுவோம். எங்களைப் பாத்து யாரும் பயப்படத்  தேவை இல்ல.

மழைத்துளி, வானவில், பட்டாம்பூச்சின்னு கவிதையா பேச நல்லா இருக்கும். சமூகத்தில இந்த கவிதையெல்லாம் வச்சுக்கிட்டு வாழ முடியாது அபி. நிறுத்து.

கண்களில் கோபமும் கண்ணீரும் ஒன்று சேர வாசுகி மிருதுளாவை நோக்கி நகர்கிறாள்.

மிருது.. அபி சொல்றதுலாம் உண்மையா ? இதெல்லாம் உங்க வீட்டுக்குத் தெரியுமா ?

“ஆமா ஆண்ட்டி. உண்மைதான்..

இல்ல.. எங்க வீட்ல இனிதான் சொல்லணும்  எங்களுக்குள்ள நடந்த இந்த மாற்றத்த முழுசா அபி பிளஸ் டூ படிக்கும்போதும், நான் காலேஜ் முதல் வருஷம் படிக்கும்போதும் உணர்ந்தோம். ரெண்டு பேருமே இது என்னனு தெரியாம புரியாம வீட்ல சொன்னா எப்படி எடுத்துப்பாங்கன்னு குழம்பிப் போயி இருந்தோம். ஆனா ரெண்டு பேருமே படிப்ப விட்ரக்கூடாதுன்னு நல்லா படிச்சு அந்த பருவத்த கடந்து வந்துட்டோம்.

லெஸ்பியன்ஸ்க்கான ஒரு மீட்டப்ல நானும் அவளும் முதன்முறையா  சந்திச்சிக்கிட்டோம். ரெண்டு பேருமே அப்போ யுஜி கடைசி வருஷம். அந்த மீட்டப்ல இருந்து பேசி பழகின அப்புறம் தான் பிஜி அட்மிஷன் ஒண்ணா போட்டோம். நாங்க எங்க உலகத்தில சந்தோசமா இருந்தோம். நாலு மாசம் முன்னாடி அபி அப்பாவும் எங்க அப்பாவும் எங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க மும்முரம் காட்டுனாங்க. அப்போதான் பயந்து இத வீட்டில சொல்லிடலாம்னு முடிவு செஞ்சோம். ஆனா அதுக்கான தைரியம் வராம நாட்களை கடத்திட்டே இருந்தோம். எவ்ளோ நாள் இப்படி போறது. இதுனால எங்க கேரியர் ரொம்ப பாதிக்குது. எங்க வேலைய செய்ய முடியல. வாழ்க்கையில முன்னேற துடிச்சிட்டு இருக்கிற நாங்க இந்த உறவ ஒரு பாரமா நினைக்கக்கூடாதுன்னு உங்க கிட்ட சொல்ல துணிஞ்சிட்டோம். எங்கள மீறி நடக்கிறது வேதியியல் மாற்றம் தான் . ஆனா எங்க கைக்குள்ள தான் எங்களோட வாழ்க்கை மாற்றம் இருக்கு. அத நாங்க சரியா அமைச்சுக்க முடியும் நீங்க எல்லாரும் மனசு வச்சா.

“இதுக்கு நாங்க ஒத்துக்க மாட்டோம்ன்னு சொன்னா”ன்னு மிரட்டல் பாஷையில கதிர் கேட்க ரொம்ப அமைதியா மிருது பதில் சொல்றா..

“ரொம்ப சிம்பிள் அங்கிள். மத்த ஆண் பெண் காதல் போல இதுலயும் வலி அதிகம். ஆனா நாங்க கை அறுத்துட்டு, சோக கீதம் பாடிட்டு வாழ்க்கைய தொலைக்க மாட்டோம். எங்களுக்கான கேரியர் கோல்ஸ் நோக்கி பயணம் பண்ணுவோம். பட் நிச்சயம் ஒரு ஆணை திருமணம் செஞ்சு அவன் வாழ்க்கைய ஸ்பாயில் பண்ண மாட்டோம்”

அப்பா. நான் ஆக்ச்சுவரியல் சயின்ஸ் ஸ்டுடென்ட் மட்டும் இல்லப்பா. ஒரு காலிக்ராஃபி – வனப்பெழுத்து ஆர்ட்டிஸ்ட் கூடத்தான். எழுத்துல எங்க ஸ்ட்ரோக் வைக்கணும்ன்னு படிச்சிருக்கேன். அதே மாதிரி என் வாழ்க்கைலயும் சில இடங்கள்ல ஸ்ட்ரோக் இருந்தா நல்லா இருக்கும்ப்பா. அது இந்த இடம் தான். இதான் என்ன அழகாக்கும். நீங்க சொன்ன எம்பயர் பில்டிங் எங்களாலயும் செய்ய முடியும்ப்பா. அதுக்கு பணம் முக்கியம் இல்ல. எங்க ரெண்டு பேரோட திறமை போதும். என்ன மாதிரியே மிருதுவும் ஒரு  காலிக்ராஃபி ஆர்ட்டிஸ்ட் தான். எங்க ப்ரொஜெக்ட்ஸ் இன்ஸ்டால பாத்து நிறைய பேரு எங்களுக்கு வாய்ப்பு தராங்க. சிவகார்த்திகேயன் சாரோட அடுத்த ரெண்டு படம், தமிழ்நாடு அரசோட மகளிர் சார்ந்த திட்டங்கள் தொடக்க விழா நிகழ்ச்சி இதுக்குலாம் நாங்க தான் டைட்டில் கார்டு ரெடி பண்றோம். எங்களோட உறவு நாங்க கட்ட நினைக்கிற சாம்ராஜ்யத்திற்கு என்னைக்குமே இடைஞ்சலா இருக்காதுப்பா. சமூகம் தான் மனசு வைக்கணும்.

அமைதியும் குழப்பமும் படர்ந்து சூரியக்கதிர்கள் மழைத்துளியைத் தொடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தது அபியின் வீட்டில்.

அகிலுக்கு போன மாதம் தன் கல்லூரியில் கொடுத்த ஒரு டிஜிட்டல் துண்டுப்பிரசுரம் நினைவுக்கு வருகிறது. அது LGBTQ குறித்த ப்ரைடு செலிப்ரஷன் பற்றியது. அந்தப் பிரசுரத்தில் கொடுத்திருந்த நம்பரைத் தொடர்பு கொண்டு அடையாறில் நடக்க இருக்கும் LGBTQ விழாவிற்கு சில டிக்கெட்களை தன் குடும்பத்திற்கும், மிருது குடும்பத்திற்கும்  முன்பதிவு செய்கிறான் .

##################################################################################

Exit mobile version