தண்டபாணியை சுற்றி தெருமக்கள் சூழ்ந்து இருக்க, அலரின் தந்தை ‘’என் மகள் எங்கே டா? அவள் உன்னுடன் தான் வந்திருப்பாள். அவளை மரியாதையாக கொண்டு வந்து விட்டு விடு என்று ஆவேசமாக குடிபோதையில் கத்திக் கொண்டே அவனை அடிப்பதற்காக கையில் கட்டையுடன் வந்தார். அவரை தெருமக்கள் தடுத்து நிறுத்தி கொண்டு இருந்தனர். இதனைக் கண்டு மனம் வெதும்பிய தண்டபாணி அட சீ!! நீ எல்லாம் ஒரு தந்தையா உன் மகள் என்னுடன் வரவில்லை நான் இந்த ஊரையே தலை மூழ்கி விட்டேன்.கோவா சென்று வேலைக்கு சேர போகிறேன் என்று ஆவேசமாக கூறினான். ஒரு பேப்பரில் கோவாஅட்ரஸை எழுதி அலரின் தந்தையின் மீது விட்டு எறிந்து விட்டு, உனக்கு சந்தேகமாக இருந்தால் வந்து பார்த்துக்கொள் என்று விட்டு வேகவேகமாக சென்றுவிட்டான்.
ரயில் அதன் பாதையில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்க அது கடந்து சென்ற ரம்யமான காட்சிகள் எதுவும் அவன் மனதில் பதியவில்லை. அன்றளர்த தாமரை போன்ற அலரின் முகம் தான் கண்முன் விரிந்தது.
ஒரே தெருவில் தான் இருவரும் வசித்தனர். அலர் ஐந்தாவது படிக்கும் பொழுதே தண்டபாணி பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டான். அவன் மேல் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது அலர் அவனிடம் தான் கணிதம் ,ஆங்கிலம் போன்றவற்றில் தனக்கு தெரியாத பாடத்தை கற்றுக் கொள்வாள். அறிவு கூர்மையான அலரிற்கு பாடம் சொல்லிக் கொடுப்பது தண்டபாணிக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அவள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் வித்தியாசமாகவும் அவனே யோசித்து தான் பதிலளிக்க கூடியதாகவும் இருக்கும். அலரை அவன் தனது சிறு தோழியாக தான் நினைத்திருந்தான். ஆனால் அவ் ஊர் மக்கள் அவர்களது உறவிற்கு சூட்டிய பெயர் வேறொன்றாக இருந்தது. அதைப்பற்றி இருவருமே கவலை கொள்ளவில்லை.
குடிகார தந்தை , சுயநலம் மிக்க பொறுப்பில்லாத தாய் என வாழ்வில் பல கரடு முரடுகள் நிறைந்திருந்தாலும் அவளுக்கு பிடித்த விஷயம் பள்ளிக்கு செல்வதுதான்.
இந்த நிலையில்தான் அலரின் தாய் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதாய் கூறினால். அலர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள், அவளுக்கு இரண்டு தங்கை ஒரு தம்பி முறையே 3, 5, ஏழாம் வகுப்புகள் படித்துக் கொண்டிருந்தனர். சிறு பிள்ளைகளை விட்டு செல்ல வேண்டாம் என்று அலறின் அத்தை மற்றும் உறவினர்கள் எவ்வளவு கூறினாலும் கேட்காமல் பிடிவாதமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டாள். இது பெரிய தலைவலியாக அலரிற்கு அமைந்தது. வீட்டு வேலை செய்வதற்கும் உடன் பிறந்தவர்கள் மற்றும் தந்தையின் தேவைகளை கவனிப்பதிலுமே அவளுக்கு நேரம் பறந்து சென்றது படிப்பதற்கு நேரம் கிடைப்பது மிக அரிதானது.
வேலைக்கு சென்ற ஒரு மாதத்திலேயே எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது நான் ஊருக்கு திரும்பி வந்து விடுகிறேன் என்றால் அவரின் தாய். ‘’ஏஜென்டிடம் இரண்டு லட்சம் பணம் கொடுத்து என்னை அழைத்துக் கொள்ளுங்கள்’’ என்று தினமும் போனில் ஒரே அழுகை ,ஆர்ப்பாட்டம் என செய்து கொண்டிருந்தால்.
இந்த நிலையில் தான் அலரிற்கு காலாண்டு தேர்வு வந்தது. சாயங்காலம் சிறிது நேரம் படித்துவிட்டு சமைக்கலாம் என்று அமர்ந்தவள் நேரம் போனதை கவனிக்கவில்லை. முழு போதையில் வீடு திரும்பிய அலரின் தந்தை உணவு இல்லை என்பதை அறிந்ததும் ஒரே ரகளை செய்தார் .அனைத்தையும் பார்த்து பொறுத்துக் கொண்டிருந்த அலரின் தலையில் இடியென வார்த்தைகளை இறக்கினார். ‘’நீ அந்த கந்தசாமிக்கு பிறந்தவள் தானே’’ என் மகளாக இருந்தால் நான் வருவேன் என்று சமைத்து இருப்பாய் என்று கூறி அலரை அடிக்க தொடங்கினார். அந்த வார்த்தையை கேட்டதும் உறைந்து விட்ட அலரிற்கு அந்த அடிகள் எதுவும் உறைக்கவில்லை.
தனது தந்தையும், அத்தையும் தன்னைவிட தனது சகோதரர்களளிடம் பாசமாக இருப்பதைப் போல் பலமுறை தோன்றினாலும், அவர்கள் சிறியவர்கள் அதனால்தான் என்று தான் நினைத்தது தவறு என்று இப்பொழுதுதான் அலரிற்கு புரிந்தது.
அலரின் அத்தையும் தன் பங்கிற்கு வீதியில் நின்று ‘’அந்த ஓடுகாலியை திருமணம் முடிக்காதே’’ என்று சொன்னேனே கேட்டியா!! எல்லோரும் திருமணத்திற்கு சீதனம் கொண்டு வருவார்கள் என்றால் உன் பொஞ்சாதி தான் ‘’இலவச இணைப்பா ஒரு பிள்ளையையே கொண்டு வந்தாலே’’. நான் பலமுறை சொல்லியும் நீ கேட்டியா உன் பிள்ளையாக இருந்தால் உன்னை இப்படி பட்டனை போடுவாளா என்று தெருவில் கூட்டம் கூடுவதை கூட கவனிக்காதது போல அவள் சத்தமிட அந்நிலையில் அலர் கூனி குறுகிப் போனால்.
அதனை கேள்விப்பட்டு தண்டபாணி அங்கு சென்ற பொழுது அலர் ஊர் கோடியில் இருக்கும் மொட்டைக்கிணறு நோக்கி செல்வது தெரிந்தது. யாரும் அறியா வண்ணம் பின் தொடர்ந்தவன் அவள் கிணற்றின் அருகே சென்றதும் அவளை பிடித்து இழுத்து ஒரு மரத்தடியில் அமர வைத்தான்.
‘’ உன் தாயிடம் பேசுகிறாயா?’’ என்று கேட்டான் தண்டபாணி. அலர் பிடிவாதமாக மறுக்கவே தானே அலரின் தாயிடம் பேசினான். நடந்ததை தண்டபாணி கூற கேட்ட அலரின் தாய் அவற்றை ஆமாம் என்று ஒப்புக்கொண்டதுடன் அலரைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. பின்னர் ‘’ நீ தான் அலரை திருமணம் முடிக்க போகிறாயே?’’ ஒரு இரண்டு லட்சம் பணம் கொடுத்துவிட்டு அலரை மணம் முடித்துக் கொள் நான் ஊருக்கு வந்து அவர்களை பார்த்துக் கொள்கிறேன் என்றால். அதனை கேட்டு மிகுந்த அருவருப்படைந்த தண்டபாணி உடனே போனை கட் செய்து விட்டான்.
இரவாகி விட அலரை வீட்டில் விடுவதற்காக வீட்டிற்கு கொள்ளை புறமாக யாரும் அறியாமல் அவளை அழைத்து சென்றான். அப்பொழுது அலரின் அத்தை அவளது தந்தையிடம் நம்ம ஊர் துணிக்கடை செட்டியாருக்கு அலர் என்றால் மிகவும் பிரியம் 60 வயது ஆனாலும் இன்னும் மாப்பிள்ளை போல் தான் இருக்கிறார். அவர் கட்டாயம் அலரிற்காக 5 லட்சம் கொடுப்பார் .அதனை வைத்து உன் மனைவியையும் அழைத்துக் கொள்ளலாம் இந்த வீடுகளில் உள்ள பொக்கை பொள்ளைகளையும் அடைத்து விடலாம் யோசித்து நன்றாக முடிவு எடு. உன் பிள்ளை ஒன்றும் அல்ல அவள், உன் பிள்ளைகளின் எதிர்காலமும் செட்டியார் கையினால் வளம் பெறும் என்று கூறிக் கொண்டிருந்தாள். அதனை கேட்ட தண்டபாணி அவளை உள்ளே அனுப்பாமல் கையுடன் அழைத்து கொண்டு பக்கத்து ஊரில் தன்னுடன் கல்லூரி படித்த தோழியின் வீட்டில் அலரை ஒரு நாள் மறைத்து வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டான்.
தன் நண்பனின் உதவியுடன் சாரதா ஆசிரமத்தின் கீழ் இயங்கும் பெண்கள் மட்டுமே படிக்கும் விடுதியுடன் கூடிய ஒரு சிறந்த பள்ளியில் அலர் படிப்பதற்கான ஏற்பாட்டை முடித்துவிட்டு வந்தான்.
அலரைக் கொண்டு அங்கே விடும்வரை தண்டபாணி மனது ஒரு நிலையில் இல்லை. இந்த சின்ன வயதில் ஒரு பெண் எவ்வளவு துன்பத்தை தான் தாங்கிக் கொள்ள முடியும் என்று அதே எண்ணங்கள் தான் அவனை சூழ்ந்து கொண்டிருந்தது.
அந்த நிலையுடனே ஊருக்குள் சென்றவனை தான் அலரின் தந்தை பிடித்து மோசமாக திட்டிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தண்டபாணி தனது கோவா அலுவலகத்தின் முகவரியை எழுதி அவரிடம் எரிந்து விட்டு ஊரைவிட்டே கிளம்பி விட்டான்.
ஒரு ஆணும் பெண்ணும் பழகினால் இந்த சமுதாயத்தில் அது காதலாக தான் இருக்க முடியுமா. ஏன் அந்த உறவு ஒரு தோழனாகவோ அல்லது ஒரு சிறு பெண்ணிற்கு நடக்கும் அவலத்தை கண்டு அதனை தீர்க்க துடைக்கும் ஒரு சராசரி மனித நேயம் மிக்க ஒரு ஆணாக இருக்கக் கூடாதா. என்று பலவாறாக மனம் வெதும்பியது. அதனை குளிர்விக்க அவனது எதிர் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் கையில் இருந்து ஒரு பச்சிளம் குழந்தை, இவனை நோக்கி தனது பொக்கை வாயை காட்டி சிரித்து கையை நீட்டி தாவியது.