மன்னியுங்கள் உறவுகளே !
உங்கள் மகிழ்ச்சியை சிதைப்பதற்கு!
மன்னியுங்கள் சொந்தங்களே!
மறக்க இயலா மரிப்பை
நினைவூட்டுவதற்கு!
மன்னியுங்கள்
காலையின் சௌந்தரத்தில்
கரித் தூளை தூவுவதற்காய்….
மன்னியுங்கள்
சூலை 16…
தேதி கிழிக்கும் போதே நினைவுகள் மனதை கிழிக்கின்றன.
மண்ணில் இட்ட விதைகள்
முட்டி முளைத்து
எட்டி பார்க்கும் போதே தீக்கிரையான
நாள் இன்று…!
மலர்கள் உதிர்வதையும் விரும்பாத மனம்..
மழலைகள் மொட்டுக்களாகவே கருகிப்போனது கண்ணைவிட்டு மறையாமலே நிற்கின்றது.
ஆடிவெள்ளி தினம் ,
ஆயிரம் கடவுள்கள் குழுமிநிற்கும்
குடந்தை மாநகரம்,
மலர்மணம் வீசிய மாநகரம் முழுதும்
உயிர் உருகும் ஓசையும் உடல் கருகும் நாற்றமும் நாசித்தொட்ட நாள்…
விரித்த இலைகளில் மனசாட்சி அற்ற கடவுள்களுக்கு மனித உடல்கள் படையலிடப்பட்ட நாள்…
கருகிய பிண்டங்கள் கற்குவியலாய் கண் முன்னே கிடக்க
கற்பனை கடவுள்களின் கயமை தெரிந்த நாள்…
ஊற்றிய நெய்யும் உலையிட்ட தானியமும் போதாதென்று
ஏற்றிய தீபங்கள் எங்குலச்சிறார்களை விழுங்கி பசிதீர்த்த நாள் …
பச்சிளங்குழந்தைகள்
சில
பணமோகம் கொண்ட வேசி அரசியல் வாதிகளால்
பள்ளியறை சமாதியான நாள் இன்று….
94 குழந்தைகளின் நினைவேந்தலுடன் மனமெங்கும் ரணமாய்
-எபிநேசர் ஈசாக்
இதை படியுங்கள் : N95 Vs M100
