– ரா.கனிகா
கணக்கு, பொழுது சாய்ந்ததும் வேலை செய்கின்ற எல்லோருக்கும் சம்பளம் கொடுத்திடு. ஏன்னா இன்னும் இரண்டு நாளைக்குள்ளார ஊரடங்கு அறிவிக்கப் போறாங்களாமா, என்று கூறி முதலாளி சுந்தரம் காரில் ஏறி புறப்பட்டார்.
சரிங்க முதலாளி என்று கணக்குப்பிள்ளை ஏகாம்பரம் தலையசைத்து, முதலாளி கிளம்பும் வரை காரின் முன் பணிவுடன் காத்திருந்துவிட்டு வந்தான். இவர்கள் பேசிக் கொண்டிருந்தது மணியின் காதில் விழுந்தது. மிகவும் சந்தோசப்பட்டான்.
ஏனென்றால், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக்கொண்டு போகலாம். அவர்களுக்கு வேண்டியதை வாங்கிய பின்பு, மீதம் இருந்தால் அந்தப் பணத்தை சேமிப்புத் தொகையாக எடுத்து வைக்கலாம் என்று அவன் நினைத்தான் என்று நீங்கள் எண்ணினால்… அது தவறு.
அவன் என்ன நினைத்தான் என்று தெரியுமா? இன்று சம்பளப் பணம் கிடைத்தால், முதலில் போய் நாலு பாட்டில் வாங்கி வச்சுக்கனும், என்னடா இவன் தண்ணி பாட்டில் தான் வாங்கப் போறானு நினைக்காதீங்க. மணி சாராய பாட்டிலதான் சொல்றான்.
மணிக்கு தன் மனைவியின் மீதும், தன் குழந்தைகளின் வருங்காலத்தின் மீதும் ஒரு துளி கூட அக்கறையே கிடையாது. மணி மாதத்திற்கு 300 ரூபாய் மட்டுமே வீட்டு செலவிற்காக கொடுப்பான். மீதிப்பணம் அனைத்தையும் குடித்தே வீணடிப்பான். அதனால் அவனது குடும்பம் ஏழ்மையில் வாடியது.
பிறகு மணி அவனது வேலைகளைச் செய்யத் துவங்கினான். அப்போது பக்கத்திலிருந்த பாலுவிடம் திரும்பி, டேய் பாலு முதலாளி சொன்னது காதுல விழுந்துச்சா? நம்ம எல்லோருக்கும் சம்பளம் கொடுக்கச் சொல்லி கணக்கு கிட்ட சொல்லிருக்காரு.
ஓஹோ… அப்படியா, அதுக்கு இப்ப என்ன? என்று பாலு கேட்டான்.
எதுவும் தெரியாத மாதிரி கேட்க்குற பாரு? ராத்திரி கடையை அடைக்கறதுக்குள்ள சாராய பாட்டில் வாங்கனும் என்று அதட்டினான்.
மணி நான் இப்ப முன்னப்போல இல்லை. போன மாத சம்பளப் பணத்தை என் மனைவியிடம் கொடுக்காமல் எல்லாப் பணத்தையும் செலவு செய்துட்டேன். அதனால் என் மனைவியும், குழந்தைகளும் சாப்பாட்டுக்கே சிரமப்படும் நிலைக்கு ஆளானதனால, பட்டினிக் கிடந்து உடம்பு சரியில்லாம போயிடுச்சு. அதனால் இந்த மாத சம்பளத்தையாவது மனைவியிடம் கொடுக்கணும் என்று சோகத்துடன் கூறினான் பாலு. அதே சோகத்துடன் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டான் பாலு.
தனக்கு நடந்த சோகத்தைக் கூறியும், மணிக்கு புத்தி வரவில்லை. நான் தான் மாதம் 300 ரூபாய் கொடுக்கின்றேனே என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருந்ததை கணக்குப்பிள்ளை ஏகாம்பரம் கேட்டுக்கொண்டிருந்தான். அவர் மணியினருகில் சென்று, ஏன்டா மணி, இன்னும் இரண்டு நாளில் கொரோனா நோய் பரவுவதால் ஊரடங்குனு அறிவிச்சிருக்காங்களே உனக்கு தெரியுமா? என்றார்.
அதற்கு மணி ம்…… தெரியும். தொலைக்காட்சியில சொன்னாங்க என்றான். சரி இன்று கொடுக்கின்ற சம்பளத்தையாவது உன் மனைவியிடம் கொடு, எப்பவும் போலவே குடிச்சே தீர்த்துடாதே என்று அறிவுரை கூறினான் ஏகாம்பரம்.
பார்க்கலாம் என்று அசட்டையாக பதிலளித்தான் மணி.
இப்படி யார் சொல்லும், அறிவுரையும் மணி கேட்பதாக இல்லை. பிறகு பொழுது சாய்ந்ததும், கணக்குப்பிள்ளை ஏகாம்பரம், மில்லில் வேலை செய்த அனைத்து வேலையாட்களையும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை அனைவருக்கும் புரியும்படி எடுத்துரைத்து, அவர்களை வரிசையில் நிற்க வைத்து, முகக்கவசம், கையுறை கொடுத்து, சம்பளப்பணம் ரூ,1000/-த்தையும், அதோடு கூடுதலாக 200 ரூபாயும் அரிசி, பருப்பு போன்ற மளிகைப் பொருட்களையும் வழங்கினான்.
ஏனென்றால், ஊரடங்கு எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதற்காக தான் இந்த மளிகைப் பொருட்களும், கூடுதல் 200 ரூபாயும் என்றான் ஏகாம்பரம்.
பிறகு மணியும் சம்பளப் பணத்தையும், மளிகைப் பொருட்களையும் பெற்றுக்கொண்டு வீடு திரும்பினான். போகும் வழியில் அவன் மனதில் ஒரு சிந்தனை எழுந்தது. ஒரு வாரத்திற்கான மளிகை பொருட்களெல்லாம் இருக்கு. நாம் வீட்டிற்கு பணம் கொடுக்க அவசியம் இல்லை என சிந்தனையை ஓட விட்டபடி வீட்டையடைந்தான். கொண்டு வந்த மளிகை பொருட்களை திண்ணையில் வைத்துவிட்டு, அப்பாடா என்று மணி அமர்ந்தான்,
மணி மளிகைப் பொருட்களோடு வந்திருப்பதை பார்த்த அவனது மனைவி கோமதி, என்னய்யா? அதிசயமா மளிகைப் பொருட்களை நீ வாங்கிட்டு வந்துருக்க என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
அதற்கு மணி நான் வாங்கவில்லை, இன்னும் இரண்டு நாளில் கொரோனா ஊரடங்காமா? அதனால தான் மில்லில் கொடுத்துவிட்டாங்க என்று தலையை சொறிந்தபடி மிகவும் அசட்டையாகக் கூறினான்.
அதானே பார்த்தேன் என்று முந்தாணியை உதறிக் கொண்டு, கோபமாக வீட்டிற்குள் சென்றாள் கோமதி.
பிறகு சங்கீதாவும், சங்கரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அப்பா திண்ணையில் அமர்ந்திருப்பதை பார்த்து, அப்பா எங்களுக்கு நாளையிலிருந்து லீவு-ப்பா என்று உற்சாகத்துடன் கூறினர்.
சரி, சரி…. என்று மட்டும் தலையை அசைத்துவிட்டு அவன் சாராய கடைக்குப் போக ஆயத்தமானான்.
அப்பா எதுவுமே பேசவில்லை என குழந்தைகளின் முகம் வாடிப் போய்விட்டது.
இதைப் பார்த்த கோமதி, இன்னைக்காவது குழந்தைங்க கூட பேசுயா, என்று குறுக்கிட்டாள். அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை. நான் சாராய கடைக்குப் போகணும் என்றான் மணி.
இது ஒன்றும் புதிதல்ல என்பது போல அவள் வேலைகளை பார்க்க சென்றாள் கோமதி. சரி, இந்த மாச சம்பளத்தையாவது கொடு. வீட்டு செலவுக்கு வேண்டும் என்று எரிச்சலுடன் கேட்டாள். மணி இந்தா வைச்சுக்கோ என 200 ரூபாயை மட்டும் நீட்டினான்.
அதை வாங்கிக் கொண்ட கோமதி என்ன?, எப்பவுமே 300 ரூபாயை கொடுப்ப, இப்ப என்ன 100 ரூபாய் குறைஞ்சுடுச்சு என்று ஆத்திரமானாள். அதற்கு மணி நாம போட்ட ப்ளான் வீணாப்போய்டுச்சே என்று எண்ணியபடி, சம்பளமே 500 ரூபாய் தான் கொடுத்தாங்க என்று சமாளித்துவிட்டு, பிறகு மணி கிளம்பிவிட்டான்.
கோமதி, இவன் இப்படித்தான் என்று மனதில் நினைத்துக்கொண்டு திண்ணையிலிருந்த மளிகைப் பொருட்களை எடுத்துக்கொண்டு, வீட்டிற்குள் போனாள். அந்தப் பையில் 200 ரூபாய் இருந்தது. (அதுதான், கணக்குப் பிள்ளை ஏகாம்பரம் கொடுத்தாரே… ஊரடங்கு கால தேவைக்கான கூடுதல் பணமாக கொடுத்த அந்த 200 ரூபாய் தான்)… அதை எடுத்து குழந்தைகள் விரும்பிய ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தாள்.
குழந்தைகளுக்கு ஒரே குஷி….. மீதம் இருந்தப் பணத்தை, மணிக்கு தெரியாதவாறு எடுத்து வைக்க வேண்டும் என அலமாரியில் மறைத்து வைத்தாள்.
இரவு 09.00 மணி, சங்கீதாவும், சங்கரும் உறங்கிவிட்டனர். கோமதி வீட்டு வேலைகளை முடித்துவிட்டு இரவு உணவும் உண்டு முடித்து, உறங்க ஆயத்தமானாள். அப்பொழுது தான் மணி வீட்டிற்குள் நுழைந்தான். வந்ததும் கோமதியிடம் பையிலிருந்த 200 ரூபாயை கேட்டு தகராறு செய்தான்.
கோமதி வேறு வழியில்லாம் அலமாரியிலிருந்த அந்த பணத்தையும் எடுத்துக் கொடுத்துவிட்டாள். மணி அதை வாங்கியதும், நாளை குடிப்பதற்காக எடுத்து வைத்துக் கொண்டான்.
மணி செய்த தகராறு பற்றியே யோசித்துக்கொண்டு, கோமதி அழுதபடியே உறங்கிப் போனாள். சிறிது நேரத்திற்குள் மணியும் உறங்கிவிட்டான்.
மில்லில் கொடுத்த மளிகைப் பொருட்களை கொண்டு எப்படியோ ஒரு வாரம் ஒடியது. இரண்டாவது வாரம் கோமதியிடம் மணி கொடுத்த 200 ரூபாயை வைத்து ஓடிவிட்டது. கோமதியிடம் இதற்கு மேல் சுத்தமாக பணம் இல்லை. மணியிடம் இருந்தப் பணம் அனைத்தையும் குடித்தே அழித்துவிட்டான். மூன்றாம் வாரம் வீட்டில் எந்தப் பொருட்களும் இல்லை.
மனைவியும், குழந்தைகளும் பசியால் வாடியது கண்டு மணி மிகவும் வருத்தப்பட்டான். நாம் வீட்டிற்காக ஏதாவது பணம் சேமித்து வைத்திருந்தால், இவ்வளவு வேதனையடைய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்று எண்ணி, மன உளைச்சலுக்கு ஆளானான்.
அப்படியே வருந்தியபடி சுவரில் சாய்ந்து உறங்கிப் போனான். மறுநாள் காலை….. ஆம் மணி எழவேயில்லை. கோமதியால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. கதறித் துடித்தாள். குழந்தைகள் தந்தையை இழந்த துக்கத்தில், அழ கூட தெம்பு இல்லாமல் பட்டினியில் வாடிப்போய் இருந்தனர்.
துக்கம் விசாரிக்க வந்த பாலு, நான் அப்பவே எனக்கு நடந்த சோகத்தைக் கூறியும் இப்படி பண்ணிட்டீயே மணி….. என்று கண்ணீர் வடித்தான்.
நாட்கள் சில கடந்தது, அவர்கள் குடியிருக்கும் வீட்டின் வாடகைத் தேதி வந்தது. வீட்டின் உரிமையாளர் வீட்டின் வாடகையை வசூலிக்க வந்தார். சாப்பாட்டுக்குகூட வழியில்லாம இரண்டு குழந்தைகளோடு வாடிக்கொண்டிருக்கும் கோமதியால் என்ன செய்ய முடியும்?
இதற்கு முன்பே பல முறை வந்து வாடகையை வசூலிக்க முடியாது என தெரிந்த வீட்டின் உரிமையாளர், பொருட்களை எடுத்துத் தெருவில் வீசியடித்து, அவர்களை வெளியேற்றிவிட்டார். கோமதியும், குழந்தைகளும் தெருவில் அனாதையாக கேட்பார் இல்லாமல் நிற்கின்றனர்.
மணியின் குடும்பம் போலவே உங்கள் குடும்பமும் அனுபவிக்க வேண்டுமென்றால், மணியைவிட இன்னும் அதிகமாகவே குடியுங்கள்…. நான் உங்களை மது அருந்த வேண்டாம் என சொல்லபோவதில்லை.
– கதைப் படிக்கலாம் – 115
இதையும் படியுங்கள் : கனவு ஓவியம்