12 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களை தவிர வேறு யாருக்கும் இந்த ஆண்டு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடியுள்ளன. இந்த நிலையில் பொதுத்தேர்வு காரணமாக 10 மற்றும் 12 –ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடக்கத் தொடங்கியுள்ளன. 9, 11ம் வகுப்புகளுக்கு இப்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என்று தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
10ம் வகுப்புக்கு 20 வகுப்பறைகளும், 12ம் வகுப்பிற்கு 20 வகுப்பறைகளும் என தனித்தனியாக பிரித்து வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்றார். இத்தகைய சூழலில் 9, 11ம் வகுப்புகளுக்கு இப்போது வகுப்புகளை தொடங்க வாய்ப்பு இல்லை என்று அவர் கூறினார். மாணவர்கள் நலன் முக்கியம் என்ற அவர், கூடுதலாக மாணவர்களை அனுமதித்தால் பள்ளிகளில் இட நெருக்கடி ஏற்பட்டு நோய் தொற்றிற்கு வழிவகுக்கும் என்றார். பொதுத்தேர்வு பணிகளை உரிய விதிகளை பின்பற்றி மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.