என்ன படிக்கலாம்…எங்கு படிக்கலாம்? வழிகாட்டும் கல்வியாளர்கள்!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு முடிவுகள் வந்த மகிழ்ச்சியை கொண்டாட ஆரம்பிக்கும் முன், அவர்களை முழுவதும் ஆட்கொண்டுள்ளது உயர்கல்வி குறித்த பல்வேறு சந்தேகங்கள்.

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை மட்டும் உயர்வாக நினைத்து வந்த நிலைமாறி, நாம் ஆச்சரியப்படும் வகையில் இன்று பல்வேறு புதிய படிப்புகள் மாணவர்களின் கனவாக மாறி வருகின்றது. குறிப்பாக அனிமேஷன், ரொபோடிக் சயின்ஸ், விஷூவல் கம்யூனிகேஷன் என அடுக்கிக்கொண்டே போகலாம். புதுமையை விரும்பும் மாணவர்களுக்கென பல்வேறு சவால்கள் நிறைந்த படிப்புகளும் காத்திருக்கின்றன.

வேலை வாய்ப்பே பிரதான இலக்கு என்பதால் எதிர்காலத்தை தீர்மானிக்கும் படிப்பை சரியாக தேர்வு செய்வதென்பது சவாலாகவே பார்க்கப்படுகின்றது. மனித வளம் தேவைக்கு மிகுதியாக உள்ள துறைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மனித வளத்தின் தேவையை அதிக அளவில் எதிர்நோக்கி காத்திருக்கும் துறைகள் பலரின் கண்களுக்கு புலப்படுவதில்லை.

மதிப்பெண் அதிகம் எடுத்தவர்களுக்கு மட்டுமே உயர்கல்வி, அவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்ற காலம் மலையேறிவிட்டது. அனைத்து பிரிவு மாணவர்களும் தங்களுக்கு உரிய உயர்கல்வியை தேர்வு செய்யவும், அந்த துறையிலையே சாதிக்கும் வாய்ப்பு விரிந்து கிடக்கிறது.

மதிப்பெண் குறைந்தால் என்ன செய்வது, சிறந்த கல்லூரியை எப்படி தேர்வு செய்வது, கல்விக்கடனை பெருவதில் உள்ள சிக்கல்கள், படிக்கும் போதே வேலைவாய்ப்புக்கான திறன்களை வளர்த்துக்கொள்வது எப்படி என மாணவர்களை சுற்றியுள்ள அடுக்கடுக்கான கேள்விகள் ஒரு புறம், படிக்கும் படிப்பிற்கு வேலை கிடைக்குமா, தலை சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என சிக்கலான கட்டத்தில் இருக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பதற்றப்பட வேண்டாம். வேலைவாய்ப்பு என்பதையும் தாண்டி தங்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் சாமர்த்தியம் மாணவர்களுக்கு உண்டு. அவர்கள் விரும்பும் துறையை சிறந்த கல்லூரியில் படிக்கவைக்கும் பெற்றோர்கள் துணை நிற்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, பொறியியல் படிப்பு என்பது அடைய முடியாத பெருங்கனவு. இன்றோ, நகரம் மற்றும் கிராமங்களின் வீதிகள் தோறும் பொறியாளர்கள் நிறைந்திருக்கின்றனர். நம் ஊரில், தெருவில், குடும்பத்தில் என எங்கு பார்த்தாலும் பொறியாளர்கள் தான்.  ஆனால், அவர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்த பொன்னுலகம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டதா? பொறியியல் படித்து விட்டால் போதும்.  கை நிறையச் சம்பாதிக்கலாம். வாழ்க்கையில் செட்டில் ஆகிடலாம் என்ற எண்ணம் ஈடேறியதா? இது விடை தெரியாத கேள்வி அல்ல. பல லட்சங்கள் செலவழித்து பொறியியல்  படித்துவிட்டு, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்கூட வேலை கிடைக்காமல் திண்டாடும் எத்தனையோ பொறியாளர்கள் உள்ளனர். ஃபைனான்ஸ் நிறுவனத்தில்  பணம் கட்டி ஏமாந்தவர்களைப் போல, அவர்களின் முகங்களில் எதிர்காலம் குறித்த அச்சம் உறைந்திருக்கிறது. எப்படியாவது, ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்துவிடத் துடிக்கிறார்கள். யதார்த்தம், அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறதா? ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்கா மற்றும் சீனாவில் எவ்வளவு பொறியாளர்கள் உருவாகிறார்களோ, அதைவிட அதிகமான எண்ணிக்கையில் இந்தியாவில் பொறியாளர்கள் உருவாக்கப் படுகின்றனர்.

ஜனவரி – 2011 நிலவரப்படி 98 லட்சமாக இருந்த இந்திய வேலையில்லா பொறியாளர்களின் எண்ணிக்கை, 2015-ல் 2 கோடியை தாண்டியுள்ளது. இதனால் பொறியியல், மருத்துவம் படித்தால் தான் வேலைவாய்ப்பு என்ற எண்ணத்தை மாணவர்கள் மாற்றி கொள்ள வேண்டும். பொறியியல், மருத்துவம் படிப்பிற்கு இணையாக ஏராளமான தொழில் படிப்புகள் உள்ளன. நல்ல‌ வேலை வாய்ப்புகள் தரும் படிப்புகள் நூற்றுக் கணக்கில் இன்று உள்ளன. பள்ளிக் கல்வியை முடித்த ஒருவர் அதற்கு மேல் என்னென்ன படிப்புகளை மேற்கொண்டு வேலைவாய்ப்பினைப் பெறலாம் என்பது குறித்த விழிப்புணர்வை ஒவ்வொருவரும் பெறவேண்டும்.

கொரோனா காலத்தில் உங்களின் எதிர்கால திட்டம் குறித்த பல குழப்பங்கள் நிலவும். வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் இந்தத் தருணத்தில் உங்களின் சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள் பதில் அளிக்க உள்ளனர்.

மாறன், கல்வியாளர்

ஏராளமான வேலைவாய்ப்புகளைக் கொண்டுள்ள கலை அறிவியல் படிப்புகள் குறித்து சென்னை சாய்ராம் பல்கலை இயக்குனரும், கல்வியாளருமான மாறன், மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க உள்ளார். உங்கள் சந்தேகங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி editor@seithialai.com

Exit mobile version