“கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லை” AICTE தலைவர் அனில் சஹஸ்ரபுதே அறிவித்துள்ளார்.
“கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் ஏதும் தற்போது இல்லை. ஆனால், அது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே JEE, NEET தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.ஆனாலும், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பிற முக்கிய படிப்புகளில் சேரும் மாணவர்களின் அடிப்படைக் கற்றல் திறனை சோதிப்பது தேவையாக உள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவுகளில் மாணவர்களின் திறனை சோதிக்க நேர்முகத்தேர்வோ, அல்லது எழுத்துத் தேர்வோ நடத்தப்பட வேண்டியது அவசியம். அது அநேகமாக Objective வடிவில் இருக்கலாம்.” என கூறியுள்ளார்.
“பாடத்திட்டத்தை பொறுத்தவரை பல்வேறு விருப்பத் தேர்வுகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. மத்திய அரசு வரையறுத்துள்ள பாடத்திட்டத்தில் இருந்து அந்தந்த மாநிலங்கள், பல்கலைக்கழகங்களில் நிலவும் சூழலுக்கேற்ப பாடங்களைத் தேர்வு செய்து நடத்திக்கொள்ளலாம். B.E., B.Tech., படிப்புகளில் சேர கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் அவசியமானவையே. 11, 12-ம் வகுப்பில் கணிதம் அல்லது இயற்பியல் அல்லது வேதியியல் படிக்கத் தவறியவர்களுக்கு பொறியியல் படிப்புகளில் சேர கூடுதல் வாய்ப்பை வழங்க உள்ளோம். 11, 12-ம் வகுப்பில் கணிதம் அல்லது இயற்பியல் அல்லது வேதியியல் பாடங்களை தவறவிட்டவர்கள் பொறியியல் முதலாம் ஆண்டில் அதை படித்துக்கொள்ளலாம்.” என்று கூறியுள்ளார்.
“11, 12-ம் வகுப்பில் எந்த பாடத்தை அடிப்படையாகக் கொண்டு படித்தாலும், வேறு வகையான உயர்கல்வி படிப்புகளில் சேரலாம். ஆனால் அவ்வாறு சேரும் முன், குறிப்பிட்ட உயர்கல்வி படிப்பு தொடர்பான பாடப்பிரிவுகளிலும் அந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் முதலாம் ஆண்டில் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்காதவர்கள் அதைக் கற்று தேர்ச்சி பெற்றால் மட்டுமே 2-ம் ஆண்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். உயர்கல்வி ஆணையம் வருவதால், கல்வி நிறுவனங்கள் எளிதில் அங்கீகாரம் பெற்றுக்கொள்ள முடியும். கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்வி படிப்புகளுக்கு தனித்தனி ஆணையங்கள் என்று இருப்பதை ஒன்றாக்கி, ஒற்றை உயர்கல்வி ஆணையமாக மாற்ற உள்ளோம். இதன் மூலம், அனைத்து பணிகளும் தற்போது நடைபெறுவது போன்றே தொய்வின்றி நடைபெறும். அதில் எந்த மாற்றமும், சிக்கலும் இருக்காது.” என்று கூறியுள்ளார். மேலும், “5+3+3+4 என்ற கல்வி முறையை கொண்டுவருவதே பல்வேறு சீர்திருத்தங்கள், வாய்ப்புகளை ஏற்படுத்தத்தான். 5+3+3+4 கல்வி முறை வந்த பின் ஒருவர் எந்த வகையான படிப்புகளிலும் சேர முடியும்.” என்று சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.