புதிய கல்விக்கொள்கையில் தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

புதிய கல்விக்கொள்கையில் தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு நேற்று வெளியிட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையில், 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆபத்தானது. 3, 5, 8 ஆகிய 3 வகுப்புகளில் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் தான் தேர்ச்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால், முதல் வகுப்பில் பள்ளியில் சேரும் குழந்தைகள் அடுத்த மூன்றாவது ஆண்டிலேயே பள்ளிப்படிப்பை கைவிடும் நிலை உருவாகி விடும்.

3ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் என்பது ஊரக மாணவர்களின் பள்ளிக்கல்விக்கு முடிவு கட்டுவதாகவே அமையும். கல்வி முன்னேற்றம் என்ற பெயரில் 3ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது கொடூரமானது. 8ம் வகுப்பு வரை எந்த வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தக்கூடாது.

மூன்றாவது மொழியை விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம் என்று மத்திய அரசு கூறினாலும் கூட, மத்திய அரசின் விதிகளில் சமஸ்கிருதத்திற்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதனால், மும்மொழிக் கொள்கை என்பது சமஸ்கிருதத் திணிப்பாகவே அமையும். அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரை தன்னாட்சி வழங்குவது நல்லது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைகளுக்கு நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப் பட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு பல்வேறு காரணங்களைக் கூறி ஏற்கனவே கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், நுழைவுத் தேர்வு என்பது அவர்களை உயர்கல்வியில் நுழையவிடாத தேர்வாக அமைந்துவிடும். இத்திட்டத்தை கைவிட வேண்டும். எனவே, பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களை நீக்கி, புதிய கல்வியைக் கொள்கையில் மத்திய அரசு தேவையான திருத்தங்களைச் செய்து வெளியிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version