தமிழகத்தில் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடபட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் நடைபெற இருந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதேசமயம், கடந்த பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்து தனித்தேர்வு எழுதும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்ததில் மாணவர்கள் யாருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பு பதிலை ஏற்ற நீதிமன்றம் பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்குகான தேர்வுக்கு தடைவிதிக்க மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும் நாளை திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது. தொடர்ந்து, தேர்வு நடத்திய விதம் குறித்து 8 வாரங்களுக்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version