அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் வரும் 30ம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இணையத்தளம் வாயிலாக கடந்த ஏழாம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை பெறப்பட்டது. இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் சார்பில் தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக இதுவரை, 1,08,619 மாணவிகள், 76,065 மாணவர்கள் மற்றும் 78 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,25,705 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பு பிரிவு மாநகரர்களுக்கான தரவரிசை பட்டியல் 29.05.2025 அன்று கல்லூரிகளில் வெளியிடப்படும் என்றும், பொது பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் 30.05.2025 அன்று கல்லூரிகளில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை கல்லூரிகளில் தகவல் பலகைகளிலும், இணையத்தளம் வாயிலாகவும் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 176 அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளிலும் சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மற்றும் பொதுக்கலந்தாய்விற்கான தகவல்கள், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக மாணாக்கர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலிருந்து தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்லூரிகளில் சேருவதற்கு 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்காத மாணாக்கர்கள் மற்றும் துணைத் தேர்வு எழுதும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் 30.05.2025 முதல் விண்ணப்பம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
