BE, B.TECH கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது

பிஇ, பி.டெக் படிப்புகளுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது.

இதுதொடர்பாக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினர், அரசுப்பள்ளியில் படித்து 7.5% இடஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்களுக்கு இன்று கவுன்சிலிங் நடக்கிறது.காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிக்குள் விருப்ப கல்லூரி மற்றும் பாடப்பிரிவு பட்டியலை பதிவு செய்ய வேண்டும்.

இன்று இரவு 7:00 மணிக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைனில் வெளியாகும். அந்த கல்லூரி தங்களுக்கு பிடித்திருந்தால் நாளை காலை 10:00 மணிக்குள் ஆன்லைனில் உறுதி செய்ய வேண்டும். உறுதி செய்தவர்களுக்கு மட்டும் நாளை மதியம் 12:00 மணிக்கு கல்லூரி ஒதுக்கீடு ஆணை ஆன்லைனில் கிடைக்கும்.

இந்த கவுன்சிலிங்கில் இடம் உறுதிசெய்யாதாவர்கள் , நாளை நடக்கும் சிறப்பு பிரிவின் பொது கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். நாளை மாலை 5:00 மணி முதல் மறுநாள் மாலை 7:00 மணிக்குள், விருப்ப கல்லூரிகளை பதிவு செய்ய வேண்டும். வரும் 23ம் தேதி காலை 8:00 மணிக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அந்த கல்லூரி பிடித்திருந்தால் 23ம் தேதி இரவு 7:00 மணிக்குள் அந்த கல்லூரியை ஆன்லைனில் உறுதி செய்ய வேண்டும். உறுதி செய்தவர்களுக்கு  24ம் தேதி காலை 10:00 மணிக்கு கல்லூரி ஒதுக்கீடு உத்தரவு ஆன்லைனில் கிடைக்கும். இந்த சிறப்பு பிரிவில் எந்த கல்லூரியையும் உறுதிசெய்யாமலும், ஒதுக்கீடு கிடைக்காமலும் இருப்பவர்கள் 25ம் தேதி துவங்கும் பொது கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.

சிறப்பு பிரிவில் 7.5% இடஒதுக்கீட்டில் பெறப்பட்ட கல்லூரியில் சேர்ந்தால் மட்டுமே கட்டணச் சலுகை வழங்கப்படும். மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தை அணுகவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version