பள்ளி மாணவ, மாணவிகள் வரும் 9ம் தேதி வரை திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:2022-2023ம் கல்வியாண்டில் அரசுப்பள்ளி மற்றும் அனைத்துவகை பள்ளிகளிலும் பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் (சிபிஎஸ்இ/ஐசிஎஸ்இ உள்பட) திறனறித் தேர்வு எழுத 9.9.2022 வரை https://dge.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
திறனறித்தேர்வு கொள்குறி வகையில் நடைபெறும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் 100 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும். இத்தேர்வு 1.10.2022 அன்று காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை நடைபெறும்.பத்தாம் வகுப்பு தமிழ்பாடம் இதற்கான பாடத்திட்டம் ஆகும். தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியிலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தேர்வில் வெற்றிபெறும் 1500 மாணவ, மாணவியர்களுள் 750 அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், 750 இதர பள்ளி மாணவர்களுக்கும் மாதம் ₹1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படவிருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.