பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று முதல் வழங்கப்படும். மாணவர்கள் மறுகூட்டலுக்கு இன்றே விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும்போது முகக்கவசம் அணிந்து, வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் தேர்வு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுவது குறித்தும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது குறித்தும் பள்ளிக் கல்வித்துறை நேற்று முன் தினம் அறிவிப்பு வெளியிட்டது.
அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”பிளஸ் 2 பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு இன்று முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதற்குப் பதிவுசெய்ய விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யவேண்டும்
விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் பாடங்களுக்கு தற்போது மறுகூட்டலோ, மறுமதிப்பீட்டுக்கோ விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பின்னரே அதற்கான வாய்ப்பு வழங்கப்படும். விடைத்தாள் நகல் தேவையில்லை எனில், மாணவர் விரும்பினால் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம்” என அதில் கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கவும் மற்றும் மதிப்பெண் பட்டியலை வாங்கவும் இன்று பள்ளிக்கு வர உள்ளனர். அவ்வாறு வரும்போது பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அரசு தெரிவித்துள்ளது.
* மதிப்பெண் பட்டியலை மாணவர்கள், பெற்றோர் வரிசையில் நின்று வாங்குவதைத் தவிர்க்கவேண்டும்.
*ஒரு மணிநேரத்துக்கு 20 மாணவர்களுக்கு வழங்கும் வகையில் நேரத்தை ஒதுக்கவேண்டும்.
* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை வாங்க வருவதைத் தவிர்க்கவேண்டும்.
* முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தளர்வு செய்யப்பட்டபிறகு வந்து வாங்கிக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
* மாணவர்கள், பெற்றோர் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும்.
* பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும்.
*மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படும்போது பணியாளர்கள் கையுறை அணிந்திருக்க வேண்டும்.
* மதிப்பெண் பட்டியல் வழங்கும் இடங்கள், விடைத்தாள் நகல், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு ஆகியவற்றுக்கான பணிகள் நடக்கும் இடங்கள் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.