குஜராத் மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை திறக்கும் முயற்சியில் மாநில அரசு தீவிரமாக இயங்கிவருகிறது.
கொரோன காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததால் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இப்டோது பல தளர்வுகளுடன் சமூகம் இயங்கி வருவதால் இப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட வேண்டும் என கூறி வருகின்றனர். பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் சில மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
தற்போது குஜராத்தில் தீபாவளி கழித்து பள்ளிகள் திறக்கப்படும் என கூறியுள்ளனர். பள்ளிகளைப் போலவே, கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வளாக கல்வியைத் தொடங்குவதற்கான விருப்பத்தை மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இதனால் ஆன்லைன் மூலம் கல்வி கற்கவேண்டிய அவசியம் இருக்காது.
இதைப்பற்றி மாநில கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சுதாசமா கூறுகையில், “ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கமான பள்ளிப்படிப்பைத் தொடங்க அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதால், கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் காலவரையின்றி மூடுவதற்கு எந்த காரணமும் இல்லை. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பெரியவர்கள், கொரோனா வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களுக்கு தெரியும்.
தற்போது, 2,000 கல்லூரிகள் மற்றும் 45 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே கல்வி கற்று வருகின்றனர். கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் ஏற்கனவே வளாக கல்வியைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளன. இந்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில், நவம்பர் 23 முதல் பள்ளிகளில் வளாகக் கல்வியை மீண்டும் தொடங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
தீபாவளி விடுமுறைக்குப் பின்னர் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வளாகக் கல்வியைத் தொடங்குவதற்கான ஒரு நிலையான வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்படும். இது தொடர்பாக மாநில அரசு விரைவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி நிர்வாகங்களுடன் கலந்தாலோசிக்கும்” என்று அமைச்சர் கூறினார்.