சென்னை பல்கலைகழகத்திற்கு தமிழக கல்வியாளரையே துணைவேந்தராக நியமிக்க வேண்டும் –மு.க.ஸ்டாலின்

சென்னை பல்கலைகழகத்திற்கு தமிழக கல்வியாளரையே துணைவேந்தராக நியமிக்க வேண்டும்
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமனம் செய்வதில், வெளிப்படைத்தன்மைக்கு மிகப்பெரிய இரும்புத்திரை அமைத்து விட்டு, துணை வேந்தர் தேர்வு நடைபெற்று வருவது கண்டனத்திற்குரியது. இப்பதவிக்கு “தேர்வுக்குழு” அமைப்பதிலேயே மாணவர்கள் நலனில் அக்கறையே இல்லாத -இப்பதவிக்கு பொறியியல் கல்வி பின்புலம் உள்ள டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத் துணை வேந்தரை தலைவராக நியமித்து – தமிழ்நாட்டில் உள்ள கல்வியாளர்கள் எல்லாம் அவமரியாதைக்கும் – அவமதிப்பிற்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.

அதன்பிறகு இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ள 177 பேரில் உத்தரப்பிரதேசம், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து மட்டும் 30 பேர் விண்ணப்பித்துள்ளதும், தற்போது அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் 12 பேரை மட்டும் இறுதிக்கட்ட நேர்காணலுக்கு அழைத்து – அந்த நேர்காணலையும் கூட காணொலிக் காட்சி மூலம் நேற்று நடத்தியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் துணை வேந்தரை தேர்வு செய்யும் பொறுப்பில் டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய துணை வேந்தரை நியமித்தது முதல் கோணல். 177 பேரில் எப்படி 12 பேரை மட்டும் நேர்காணலுக்கு அழைத்தார்கள் என்பது அடுத்தகட்ட இருட்டடிப்பு. அப்படி அழைக்கப்பட்டவர்களிடம் காணொலிக் காட்சி மூலம் நேர்காணல் நடத்தியிருக்கிறார் தேர்வுக் குழுத் தலைவர் என்பது, மர்மமான நடைமுறை மூலமாகவே துணை வேந்தர் தேர்வு நடைபெறுவதைக் காட்டுகிறது.

163 ஆண்டு புகழ்பெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை நியமிக்க – அ.தி.மு.க. அரசும் – வேந்தரும் இணைந்து செயல்படுவது மிகுந்த வேதனைக்குரியது. ஆகவே, சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் அ.தி.மு.க. அரசும், வேந்தர் பொறுப்பில் உள்ள மாண்புமிகு தமிழக ஆளுநரும் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டும் விதத்தில் – விண்ணப்பித்தவர்களில் 12 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டது எதனடிப்படையில்? அவர்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? என்பதை அறிவிக்க வேண்டும்.

சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த கல்வியாளர் ஒருவரையே துணை வேந்தராக நியமிக்க வேண்டும். அதை அ.தி.மு.க. அரசு உறுதி செய்ய வேண்டும். மாநில அரசுக்கு உள்ள உரிமையை – அதிகாரத்தைப் பறிகொடுத்து – கலை மற்றும் அறிவியல் கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சிக்கு நிச்சயம் அனுமதித்திடக் கூடாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Exit mobile version