காலண்டை போல அரையாண்டு தேர்வும் ரத்து?.. ஓரிரு நாட்களில் அறிவிப்பு என தகவல்

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் முடப்பட்டுள்ள நிலையில், அரையாண்டு தேர்வையும் ரத்து செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. தொடர்ந்து, 6 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால், ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். உயர்நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இந்த மாதம் 31-ம் தேதி வரை அமலில் உள்ள நிலையில் பேருந்துகள் இயக்கம், கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு என பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும் கல்வி நிறுவனங்கள் திறக்க தமிழக அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. அதேசமயம், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, பள்ளிகள் திறப்பு குறித்த வழக்கு ஒன்றில் தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகளை திறக்க வாய்ப்பு உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்றம், அரசின் முடிவு குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், கடந்த மாதம் நடைபெற இருந்த காலாண்டு தேர்வை ரத்து செய்தது போல அரையாண்டு தேர்வையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் பண்டிகை காலம் என்பதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அரையாண்டு தேர்வையும் ரத்து செய்ய அதிகாரிகள் பரிந்துரைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முறையான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Exit mobile version