தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருவதால் பள்ளி, கல்லூரி இறுதி தேர்வுகளை மார்ச் மாதத்திலேயே முடிக்க, தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டபேரவைக்கு அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பது உட்பட அனைத்து பணிகளும் தற்போதே தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேர்தலில் வாக்குப்பதிவு மையங்களாகவும், ஓட்டு பெட்டிகளை பாதுகாப்பாக வைத்து எண்ணுவதற்கும் பள்ளி, கல்லூரிகளின் கட்டிடங்கள்தான் முழுமையாக பயன்படுத்தப்படுகின்றன
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாவிட்டாலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசு அறிவிப்புக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
பெற்றோர், ஆசிரியர் சங்கத்தினரும் இந்த மாதம் பள்ளியை திறக்க வேண்டாம் என்று பல இடங்களில் கோரிக்கை வைத்தனர்.
இதனால் ஒவ்வொரு பள்ளிக் கூடத்திலும் கருத்துக் கேட்பு கூட்டம் கடந்த 9-ந் தேதி தலைமை ஆசிரியர்களால் நடத்தப்பட்டது. இதன் மீது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தி அதிகாரிகள் மற்றும் சுகாரத்துறையினருடன் கலந்து பேசி முடிவெடுக்க உள்ளார்.
காலாண்டு தேர்வு நடத்தப்படாத சூழலில் தற்போது டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் போதிய கால இடைவெளி இல்லாத காரணத்தால் 40 சதவீத பாடங்களை குறைத்து நேராக முழு ஆண்டு தேர்வு எழுதும் வகையில் பாடங்கள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற மார்ச் மாதத்துக்குள் பள்ளி, கல்லூரிகளுக்கான இறுதித் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், அதற்கேற்ப பாடங்களை விரைந்து நடத்தி தேர்வுக்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் இப்போதே திட்டமிட்டு வருகிறார்கள்
பள்ளி, கல்லூரிகள் திறக்கும் தேதி எப்போது என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரியவரும் என்பதால், எந்தெந்த தேதிகளில் பரீட்சை நடைபெறும் என்ற அட்டவணையும் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.