உலக சாதனை படைக்கும் முயற்சியில் டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி

சென்னை கேகே நகரில் உள்ள சிவன் பூங்காவில் குழந்தைகளின் கல்வி உரிமைக்கான மிகப்பெரிய விழிப்புணர்வு பரப்புரை இன்று (ஜூலை 9) நடைபெற்றது. இந்த பரப்புரை நிகழ்வை சர்வதேச சாதனைகளின் புத்தகத்தில் (Worldwide Book of Records) இடம்பெறவைப்பதற்கான முயற்சியையும் டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி எடுத்துள்ளார். இந்த நிகழ்வு குறித்து டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி கூறியதாவது: –

கல்விக்காக பலரும் பல முயற்சிகளை செய்துள்ளனர். நான் எனது முயற்சியாக ஒன்றரை வயதில் இருந்து ஆறு வயதான குழந்தைகளுக்கு ஆதரவற்ற குழந்தைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளேன். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மிகவும் சுயநலமாகவுள்ளனர். அவர்களுக்கு ஆதரவற்ற, பெற்றோரை இழந்த, படிப்பதற்கு வாய்ப்புகளற்ற குழந்தைகள் பற்றி தெரிவது கிடையாது. இதனால் அவர்களுக்கு அனுதாபம் என்பதே இல்லாமல் போய்விடுகிறது. இதனை உருவாக்குவதாற்காக நான் இந்த பரப்புரையை மேற்கொண்டேன். நிறைய குழந்தைகள் ஆதரவு வேண்டி இருக்கின்றனர். கல்விக்காக மட்டுமின்றி அவர்கள் உணாவு, அன்றாட வாழ்க்கைக்கே ஆதரவு தேவைப்படுகிறது. அந்த உதவியை பெறும் நோக்கத்தில் இந்த பரப்புரை நடைபெற்றது.

நான் இயக்குநராக இருக்கும் ஸ்ரேயாஸ் குளோபல் அகாடமியுடன் லிட்டில் மில்லினியம் பள்ளி இணைப்பில் உள்ளது. அந்த பள்ளியில் பயிலும் ஒன்றரை முதல் ஆறு வயது குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறேன். அவர்களுக்கு புரிந்துணர்வை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறேன். வாழ்க்கையில் அடுத்தவரின் கஷ்டத்தைப் பகிர்ந்துகொள்ளும் புரிந்துணர்வு திறன் மிகவும் அவசியம். அவற்றை வளர்க்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கேகே நகர் சிவன் பார்க்கில் பெருநடை பேரணி (Walkthaon Rally) மூலம் இந்த பரப்புரை செய்யப்பட்டது. இந்த பரப்புரையில் 200 குழந்தைகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் கலந்துகொண்டனர். அங்குள்ள பெற்றோரிடம் ஆதரவற்ற குழந்தைகளுக்காக உதவி கேட்கப்பட்டது. அதன்பிறகு நிர்மலா சிசுபவனுக்குச் சென்று ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வாழ்வியலை அவர்களுக்குக் காட்டினோம். பெற்றோர் பலரும் உதவுவதற்கு முன்வந்துள்ளனர்.

என்னுடைய லட்சியம் இந்தியா மற்றும் ஆசிய பசிபிக் பகுதியில் கல்வி அறிவை அதிகப்பட்சம் கொண்டு வர வேண்டும் என்பது. 100% கல்வி அறிவைக் கொண்டு வர வேண்டும் என்பதில் விருப்பம். ஆனால் அது அவ்வளவு எளிதில் நடக்காது. குழந்தைகள் உரிமைகளுக்காக நான் வேலை செய்கிறேன். எனக்கு ஆதரவு தேவைப்படுகிறது. எனக்கு இளம் வயதில் கல்வி கற்க வசதி இல்லாமல் இருந்தது. அதனால் நான் அனைவருக்கும் கல்வி தர நினைக்கிறேன். இன்று வரைக் கூட நான் படித்துக்கொண்டே இருக்கிறேன். என் ஒருவருடைய முயற்சியால் மட்டும் முடியாது. அதனால் எல்லோரும் இணைந்து சேவையாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.

இந்த பரப்புரையை Worldwide Book of Recordsஇல் இடம்பெற வைப்பதற்கு முயற்சி செய்திருக்கிறேன். இதற்கு அந்த அமைப்பிடம் இருந்து அனுமதி கிடைத்துள்ளது. நாம் செய்த பேரணியை பதிவு செய்து, வீடியோக்கள், புகைப்படங்கள் எடுத்துள்ளோம். குழந்தைகள், பெற்றோர்களின் பேட்டியையும் பதிவு செய்து சமர்பித்துள்ளோம். நமது பணியை அவர்கள் 3 நாட்களில் சோதனை செய்வார்கள். இதில் நாம் தேர்வானால் உலக சாதனை படைப்போம். நாம் செய்த ஒவ்வொரு முயற்சியும் இந்த சாதனை புத்தகத்தில் இடம்பெறும்.

இந்த நிகழ்வை நடத்துவதற்கு செய்தி அலை ஊடகம் ஆதரவாக இருந்தது. அதேபோல எனது சகோதரர் யயாத்தி ராஜ், லிட்டில் மிலினியம் பள்ளி நிர்வாகிகள் தன்யஸ்ரீ அசோக் நகர், மகாலட்சுமி கேகே நகர், சௌமியா R.A.புரம், ஷில்பா ஆழ்வார்பேட்டை, சங்கீதா திருவெல்லிக்கேணி, சந்தியா போரூர் ஆகியோரும் உதவி செய்துள்ளனர்.

இவ்வாறு டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி கூறியுள்ளார்.

Exit mobile version