பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் யுஜிசி தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக, தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து, கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு எனப்படும் யூஜிசி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் கட்டாயம் என்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 31 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான விசாரணையில், பல்கலைக்கழக மானியக் குழு தனது பதிலை பிரமாணப்பத்திரமாக இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வது மாணவர்களின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை எனவும், இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்தால் அந்த செயல் சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
