
இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்ட 45 வயது நபர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் தும்கூரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கரண்ணா (45). கடந்தாண்டு அக்டோபர் மாதம் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மேகனா (25) என்பவருக்கும் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடந்தது. சங்கரண்ணா 45 வயது தான் என்றாலும், அவருடைய தோற்றம் சராசரியாக 60 வயது முதியவர் போன்று இருந்தது. அதனால் முதியவருக்கும் இளம்பெண்ணுக்கும் திருமணம் என்று சமூகவலைதளங்களில் இதுதொடர்பான செய்திகள் வைரலாகின.
இந்நிலையில் திருமணமான கொஞ்சநாளில் இருந்தே சங்கரண்ணாவின் தாயாருக்கும் மேகனாவுக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது. அதனால் கணவரை தனிக்குடித்தனம் போக தூண்டியுள்ளார் மேகனா. ஆனால் அதற்கு சங்கரண்ணா சம்மதிக்கவில்லை. இதனால் தொடர்ந்து மாமியாருக்கும் மருமகளுக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது. ஒருக்கட்டத்தில் சங்கரண்ணா தலையிட்டு பிரச்னை தீர்ந்தபாடில்லை.
இதனால் மனமுடைந்த சங்கரண்ணா அக்கிமிதிபாளையா என்ற கிராமத்தில் ஆட்களில்லாத இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து கணவரின் சாவுக்கு மாமியார் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார் மேக்னா. அத்போன்று சங்கரண்ணா சாவுக்கு மேகனா தான் காரணம் என்றும் தாயார் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
