பனிச்சரிவில் சிக்கிய 6 இந்திய கடற்படை வீரர்கள்… தீவிர தேடுதல் பணியில் மீட்புக் குழு..!!

உத்தரகாண்டில் திரிசூல சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இந்திய கடற்படை வீரா்கள் 6 போ் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள திரிசூல சிகரத்தில் இந்திய கடற்படையைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு, மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் குமாவுன் இமயமலையில் உள்ள சிகரங்களில் திரிசூலம் சிகரமும் ஒன்றாகும். இந்த சிகரத்தில் இந்திய வீரர்கள் மலையேற்றம் பயிற்சி செய்வது வழக்கம்.

இந்நிலையில், 20 பேர் கொண்ட மலையேற்ற வீரர்கள் கடந்த 3ம் தேதி மும்பையில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கினர். இவர்களில் கடற்படையை சேர்ந்த 10 வீரர்கள் சிகரத்தின் உச்சிக்கு செல்வதற்கான பயணத்தை நேற்று தொடங்கினர்.

அப்போது, பனி மலையில் எதிர்பாராத விதமாக பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், 6 இந்திய கடற்படை வீரர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடற்படை செய்தி தொடர்பாளர், கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில்,

10 பேரை கொண்ட மலையேற்ற வீரர்களில் 4 பேர் பாதுகாப்பாக இருக்கின்றனர். மாயமான 6 பேரை தேடும் பணியில் கடற்படை, ராணுவம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version