200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயதுக் குழந்தை… இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்…

மத்தியப் பிரதேசத்தில் 200 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயதுக் குழந்தையை காப்பாற்ற, மீட்புக் குழுவினர் இரண்டாவது நாளாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
Kid Prahlad

மத்தியப் பிரதேச மாநிலம் நிவாடி மாவட்டத்தில் உள்ள புராபுஜுர்க் கிராமத்தில் வசித்து வருபவர் ஹரிகிஷன் குஷ்வாஹா. இவரின் 3 வயது மகன் பிரஹ்லாத். இவர் சில நாட்களுக்கு முன்பு ஆழ்துளைக் கிணறு ஒன்றை தோண்டியுள்ளார். அதன்பின்னர், கிணற்றை இரும்பு தட்டால் மூடியுள்ளார்.

அந்தக் கிணற்றில் குழாய் அமைக்கும் பணிக்காக வந்த ஊழியர்கள், கிணற்றின் மேலிருந்த இரும்பத் தட்டை எடுத்துள்ளனர். அப்போது அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பிரஹ்லாத், எதிர்பாராதவிதமாக அதனுள் விழுந்துள்ளான். இதனையடுத்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு குழந்தையின் பெற்றோர் உடனடியாக தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களும், மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அந்தக் கிணற்றில் சுமார் 100 அடி அளவு வரை தண்ணீர் இருப்பதால், குழந்தை எந்த ஆழத்தில் உள்ளார் என்பதைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது தெரியவில்லை. இதனால் மீட்பு பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆனால், சிறுவனின் குரலை தங்களால் கேட்க முடிகிறது என்று மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளது சற்று ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது.

குழந்தை 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2019- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சுர்ஜித் என்ற குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவத்தின் வடு இன்னும் மறையாத நிலையில், மற்றுமொரு குழந்தை ஆழ்துளை குழந்தை கிணற்றில் விழுந்துள்ளது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Exit mobile version