கொரோனா காலத்தில் விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய சுகாதாரத் துறை அதிகாரி; வேலைப்பளுவால் தூக்கிட்டு தற்கொலை!

கர்நாடகாவில் கொரோனா காலக்கட்டத்திலும் விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வந்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் அரசின் சொல்லும் பணிகளை முடிக்க முடியாமல் வேலைப்பளுவினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தின் நஞ்சன்கூடு தாலுகாவில் தலைமை சுகாதாரத் துறை அதிகாரியாக பணியாற்றிவந்தவர் தான் மருத்துவர் நாகேந்திரா. மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட அதிகாரியாக அறியப்பட்ட இவர், கொரோனா ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே விடுப்பு எடுக்காமல் குடும்பத்தினரிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு செம்மையாக பணியினை மேற்கொண்டுவந்தார். இருந்த போதும் அவர் பணியாற்றும் நஞ்சன்கூடு தாலுகாவில் சுகாதாரப்பணியாளர்கள் குறைவாக இருப்பதன் காரணமாக, அரசின் உத்தரவின் படி அவர்களால் பரிசோதனையின் எண்ணிக்கையை எட்டமுடியவில்லை என்று கூறப்படுகிறது.

ஏன் இந்த தாலுகாவில் மட்டும் பரிசோதனையின் எண்ணிக்கை குறைவாக வருகிறது? அதிகாரிகள் என்ன தான் செய்துகொண்டு இருக்கிறார்கள்? என சுகாதாரத்துறையில் இருந்து அவருக்கு அதிக அளவில் நெருக்கடி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த மருத்துவர் நாகேந்திரா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல், பரிசோதனைகளுக்கு மட்டும் எட்ட வேண்டும் என்ற அரசின் முடிவுக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Exit mobile version