ஹைதராபாத்தில் தனியார் விடுதியில் நடந்த போதை விருந்தில் பிரபல நட்சத்திர நடிகர்களின் மகள், அரசியம் பிரமுகர்களின் வாரிசுகள் சிக்கியுள்ளது ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் பிரபல நட்சத்திர விடுதி உள்ளது. இங்கு வி.வி.ஐ.பி-க்களுக்கு மட்டும் நள்ளிரவில் போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதை தொடர்ந்து நேற்று அதிகாலை காவல்துறை ஆணையர் ஜோயம் டேவிஸ் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் விடுதிக்குள் அதிரடியாக புகுந்தனர். அப்போது விருந்து நடந்த பகுதியில் 148 பேரை அவர்கள் சுற்றி வளைத்தனர்.
விசாரணையில் தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகள் நிஹாரிகா, காங்கிரஸை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரேணுகா சவுத்ரி, ஆந்திரா முன்னாள் டி.ஜி.பியின் மகள் உள்ளிட்டோர் போதை விருந்தில் இருந்தது தெரியவந்தது.
அந்த விருந்துக்கு வந்திருந்த அனைத்து விருந்தாளிகளுக்கும் பிரவுன் சுகர், கொகைன் உள்ளிட்ட போதைப் பொருள்
வழங்கப்பட்டது தெரியவந்தது. மேலும் விருந்தில் வைக்கப்பட்டு இருந்த 12 கிராம் கொகைன் போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
எனினும் நடிகை நிகாரிகாவிடம் போலீசார் விசாரணை நடத்திவிட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நடிகை மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் நிகாரிகா தமிழில் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.