ஆந்திராவில் பரவும் மர்ம நோயினால் பாதிக்கப்பட்டவர்களை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று நலம் விசாரித்தார்.
ஆந்திரா:
ஆந்திரா மாநிலத்தில் தொடர்ந்து பரவும் மர்ம நோயினால் மக்களிடையே பெரும் பயம் ஏற்பட்டு வருகிறது.இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுகின்றனர்.மேலும் இதன் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வித்தியாசமான முறையில் குரல் எழுப்பி வருவதால் இந்த நோய் குறித்து எதுவும் அறியாமல் மருத்துவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
மேலும், ஏலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதால் அங்குள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. இதனால் போதிய இட வசதி இன்றி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நோயின் பாதிப்பினால் மக்கள் திடீரென மயங்கி விழுவதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று நலம் விசாரித்தார்.அதன்பிறகு நோயின் தன்மை பற்றி விசாரித்த அவர்,பின்னணி குறித்தும் கேட்டறிந்தார்.பின்னர் பாதிக்கப்பட்ட உள்ளூர்வாசிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிகிச்சையையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.இந்த பாதிப்பு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், சதி செயலா? இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.