செப்டம்பர் 21 ம் தேதி முதல் ஆந்திராவில் பள்ளிகள் திறப்பு

ஆந்திர அரசு 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து உள்ளது.

ஆந்திர மாநிலம்:

ஆந்திரா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் போடப்பட்ட ஊரடங்கால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே ஆந்திராவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தநிலையில் மத்திய அரசின் 4-வது கட்ட ஊரடங்கு தளர்வு நிபந்தனைகளை கடைப்பிடிக்க ஆந்திர அரசு மேலும் சில தளர்வுகளை அறிவித்து உள்ளது.அதில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் திறக்க அனுமதி அளித்தும்,அதேபோல் ஜூனியர் கல்லூரிகளையும் திறக்கலாம் என்றும் பி.எச்.டி. படிப்புகளுக்கான வகுப்புகள் சில கட்டுப்பாடுகளுடன் தொடங்க அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதி கடிதத்தை எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.அந்த கடிதத்தில், “தங்களது குழந்தைகளை முழு சம்மதத்துடன் பள்ளிக்கு அனுப்புகிறோம்” என்று பெற்றோர்கள் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.அதனை தொடர்ந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் வகுப்பறையில் சமூக இடைவெளியை பின்பற்றி பாடங்களை ஆசிரியர்கள் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும், வருகிற 21-ந் தேதி முதல் 100 சதவீதம் பங்கேற்க கூடிய அளவில் அரசியல், விளையாட்டு, மதம், கல்வி தொடர்பான கூட்டங்களை நடத்தலாம். திறந்தவெளி திரையரங்குகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட உள்ளதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

Exit mobile version