”இரண்டு சப்பாத்திகள் கூட கிடைக்காமல் அவதியுறும் இந்திய மக்கள்… ” பிரதமருக்கு அர்விந்த் கெஜ்ரிவால் முக்கிய கோரிக்கை!!

இரண்டு சப்பாத்தி ரொட்டி கூட கிடைக்காமல் மக்கள் அவதி அடைகிறார்கள்; இலவச தானியங்கள் வழங்கும் திட்டத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கோரிக்கை.

டெல்லி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பெருந்தொற்று பரவலின் போது நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மக்களின் நலன் கருதி “பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா” திட்டத்தின் மூலம் உணவு தானியங்கள் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 80 கோடி ஏழை மக்கள் மாதந்தோறும் 5 கிலோ கோதுமை, 5 கிலோ அரிசி, 1 கிலோ உளுத்தம்பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது; 2020 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட திட்டம் பெருந்தொற்று பரவல், ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக 2021 நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அமைச்சரவை முடிவெடுத்தது.

இந்நிலையில் இம்மாதத்துடன் திட்டம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் திட்டத்தை நீட்டிப்பது குறித்து இதுவரை எந்த பரிசீலனையும் அரசிடம் இருந்து கிடைக்கப்பெறவில்லை என மத்திய உணவுத்துறை செயலாளர் சுதன்ஷி பாண்டே தெரிவித்து பல்வேறு செய்திகளில் வெளியானது.

பிடிஐ செய்தி நிறுவனம் இது தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்த நிலையில் அதனை மேற்கோள்காட்டி பதிவிட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நாட்டில் விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் இரண்டு சப்பாத்தி ரொட்டிகள் கூட கிடைக்காமல் மக்கள் அவதியுறுகிறார்கள். கொரோனா பெருந்தொற்று காரணமாக வேலையின்மை அதிகரித்திருக்கிறது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை மேலும் 6 மாத காலத்திற்கு நீடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Exit mobile version