பெங்களூருவில், தமிழக பதிவெண் கொண்ட காரின் முன்பகுதியில் பறந்த பாகிஸ்தான் நாட்டு கொடியினை அகற்றிவிட்டு, இந்திய தேசிய கொடியை போக்குவரத்து போலீசார் பொருத்தினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெங்களூரு:
இந்திய-பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக பிரச்சனையாக இருந்து வருகிறது. கடந்த 2008 ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்திய-பாகிஸ்தான் இடையே வர்த்தகம் முதல் கிரிக்கெட் போட்டிகள் வரை நடைபெறுவது தடைப்பட்டன.
இந்த நிலையில்,நேற்று பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி அருகே வீரசந்திரா பகுதியில் எலெக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக தமிழ்நாட்டில் இருந்து ஒரு கார் பெங்களூரு நோக்கி வந்து கொண்டு இருந்தது. அந்த காரின் முன்பகுதியில் பாகிஸ்தான் நாட்டு கொடி கட்டப்பட்டு இருந்தது. இதனை கவனித்த போக்குவரத்து போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி காரில் வந்த 2 பேரிடம் பாகிஸ்தான் கொடியை கட்டியது பற்றி கேட்டனர். ஆனால் அதற்கு அவர்கள் சரியான விளக்கம் தரவில்லை.
இதையடுத்து இதுபோன்று பாகிஸ்தான் கொடியை கட்டி வர கூடாது என்று 2 பேருக்கும், போலீசார் அறிவுரை வழங்கி இந்திய தேசிய கொடியை காரின் முன்பகுதியில் பொருத்திய போலீசார் அங்கிருந்து காரை அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.