வெள்ளத்தில் தத்தளிக்கும் பீகார் 29 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு

பிஹாரில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் 12 மாவட்டங்களில் உள்ள 29 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.என பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக பிஹாரில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கண்டக், பாக்மடி, கோசி ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிழக்கு சாம்ப்ரான், தர்பங்கா, சஹர்சா கோபால்கஞ்ச் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தால் 29 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முசாபர்பூர் தர்பங்கா இடையே தேசிய நெடுஞ்சாலையில் வழிநெடுகிலும் தங்கியுள்ளனர். கோபால்கஞ்ச் – மோதிஹாரி இடையிலான நெடுஞ்சாலையிலும் 15 ஆயிரம் பேர் கூடாரங்களில் தங்கியுள்ளனர்.


பேரிடர் நிர்வாக கூடுதல் செயலாளர் ராமச்சந்துருடு கூறுகையில், ‘‘12 மாவட்டங்களில் 86 வட்டாரங்களில் உள்ள 625 பஞ்சாயத்துக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் கனமழைக்கு 8 பேர் பலியாகியுள்ளனர் .மத்திய, மாநில அரசுகளின் பேரிடர் மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்துள்ள 1.8 லட்சம் மக்களுக்கு 463 சமுதாய உணவுக் கூடங்கள் மூலம் உணவு வழங்கப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.

Exit mobile version