மம்தா பானர்ஜியை கட்டி பிடிப்பேன்..வாய்விட்ட பாஜக தலைவருக்கு கொரோனா தொற்று

கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பதாக கூறி, சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தொடர்ந்து உரசல் நிலவி வருகிறது. பாஜக தரப்பில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் மம்தா எதிர்க்கட்சியினரை டீல் செய்து வருகிறார்.

இந்நிலையில், பாஜக தேசிய செயலாளரான அனுபம் ஹஸ்ரா, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியது.
அந்த நிகழ்ச்சியில் அனுபம் ஹஸ்ரா பேசும்போது, ‘பாஜக தொண்டர்கள் கொரோனாவை விட ஒரு பெரிய எதிரியுடன் போராடுகிறார்கள். அவர்கள் மம்தா பானர்ஜியுடன் போராடுகிறார்கள். நான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்” என கூறி இருந்தார்.

இந்த பேச்சு மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கோபத்தை உண்டாக்கியது. அவரை கடுமையாக விமர்சிக்கப்பட்டது மட்டுமின்றி, போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அனுபம் ஹஸ்ரா, கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

Exit mobile version