டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: பயங்கரவாத சதியாக இருக்கலாம்

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று மாலை குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டு ஒன்று வெடித்தது.  இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார் உயிரிழப்பு எதுவும் இல்லை.  இதன் எதிரொலியாக, அப்பகுதியில் உள்ள எல்லைகள்  மூடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.  சம்பவம் நடந்த இடத்தில் சிறிது எரிந்த நிலையில் கைக்குட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. மேலும் இஸ்ரேல் தூதரக அதிகாரிக்கான முகவரியிட்டு கடிதம் ஒன்றும்  கைப்பற்றப்பட்டது. 

அதில் உள்ள கைரேகை பதிவுகளை தடயவியல் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து, எந்தவொரு அசம்பாவித சம்பவமும் ஏற்பட்டு விடாமல் தவிர்க்க விமான நிலையங்கள், அரசு கட்டிடங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில்  பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து டெல்லி, மும்பை, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர கண்காணிப்புடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள விஜய் சவுக் பகுதியில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்கள் பலர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தனர்.

இதில், முதற்கட்ட தகவலின்படி, மக்களிடையே அச்சம் பரவுவதற்கான நோக்கில் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.  பெரிய சதி திட்டத்திற்கான முன்னோட்டமாக இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என டெல்லி போலீஸ் வட்டாரம் தெரிவித்து உள்ளது.டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. விசாரணைக்கு இஸ்ரேல் முழு ஒத்துழைப்பு தருவதாகவும் இஸ்ரேல் தூதர் ரான் மால்கோ தெரிவித்துள்ளார்.

Exit mobile version