பீகார் மாநிலத்தில் இன்று தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அவுரங்காபாத்தில் தேர்தல் நடக்கும் பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கிற்கு மத்தியிலும், பீகார் சட்டசபை தேர்தலுக்கான 71 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தலாகையால், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக 30 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமுள்ள தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அவுரங்காபாத்தின் திப்ரா பகுதியில், இரண்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சி.ஆர்.பி.எப். போலீசார் வெடி குண்டுகளை கைப்பற்றி, அதனை வெடிகுண்டு நிபுரணர்களின் உதவியோடு செயலிழக்கச் செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் வாக்குப்பதிவு பாதிக்கப்படும் என்ற அச்சம் வேட்பாளர்களிடையே எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து அனைத்து பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.