கேரளா சட்டப்பேரவையில் பட்ெஜட்டை தாக்கல் செய்துள்ள அம்மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், ஓராண்டுக்குள் 8 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
கேரள சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது, வரும் நிதி ஆண்டில் 8 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அறிவித்தார். சமூக நலத்திட்டங்கள் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ஆயிரத்து 600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அனைவருக்கும் மலிவு விலையில் இணைய வசதி வழங்கப்படும் என்றும், ரப்பருக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 170 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும், அனைத்து ஏழைக்குடும்பங்களுக்கு பாதி விலையில் லேப்டாப் வழங்கப்படும் என்றும் கூறினார். 50 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்றும், அதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தாமஸ் ஐசக் கூறினார்.