உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது – மத்திய அரசு

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 தடுப்பூசிகள், சிறந்த பாதுகாப்புத்தன்மையை கொண்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு உள்நாட்டில் உருவாகி கொண்டிருக்கும் தடுப்பூசி தொடர்பான கேள்விகளுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் சுகாதாரத்துறை ராஜாங்க அமைச்சர் அஷ்வினி சவுபே நேற்று பதில் அளித்து அவர் கூறியதாவது:-

புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் பிரித்தெடுத்த வைரசை பயன்படுத்தி, பாரத் பயோடெக் நிறுவனம் ஒரு தடுப்பூசியை (கோவேக்சின்) உருவாக்கி உள்ளது.இந்த தடுப்பூசியை சுண்டெலிகள், எலிகள், முயல்கள், கினி பன்றிகள் ஆகிய சிறிய விலங்குகளுக்கு செலுத்தி அதன் பாதுகாப்பு மற்றும் சகித்துக்கொள்ளும் தன்மை ஆராயப்பட்டன. மேலும், முதல் கட்ட மருத்துவ பரிசோதனைகள் (மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்தல்) மற்றும் பெரிய விலங்குகளுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நடந்து முடிந்துள்ளன.இந்த சோதனைகளில் அந்த தடுப்பூசி சிறந்த பாதுகாப்பை வெளிப்படுத்தி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி சோதனை நடைபெற்று வருகிறது. இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை தகவல்கள்படி 30-க்கும் மேற்பட்ட தடுப்பூசி முயற்சிகள் ஆதரிக்கப்பட்டு வருகின்றன. 3 தடுப்பூசிகள் முதல், இரண்டாவது, மூன்றாவது கட்டங்களின் மேம்பட்ட நிலையில் உள்ளன. 4 தடுப்பூசிகள், ஆய்வுக்கூட பரிசோதனை வளர்ச்சிக்கு முந்தைய மேம்பட்ட நிலையில் இருக்கின்றன.கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி தொடர்பான பல்வேறு ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ரூ.25 கோடி ஒதுக்கி உள்ளது.மேலும்,உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 தடுப்பூசிகள், சிறந்த பாதுகாப்புத்தன்மையை கொண்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version