எல்லையில் படைகளை குவிக்கும் சீனா– ராணுவ தளபதி கவலை

லடாக் எல்லையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவ படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்று ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தகவல் தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லையில் இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே திடீரென இன்று ஆய்வு மேற்கொண்டார். லடாக் எல்லையில் சீனா ராணுவ படையை குவித்து வருவதாக இந்தியா குற்றசாட்டியுள்ளது. எனவே சீனாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்து பலத்தை காட்டி வருகிறது.

இதனால் இந்தியா – சீனா எல்லை விவகாரத்தில் மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு படையினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ தளபதி, லடாக்கில் கிழக்கு, வடக்கு பகுதியில் சீனா தனது படைகளை குவித்து வருவது கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

சீனப் படைகளின் நகர்வு மற்றும் ஆப்கானிஸ்தான் நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் பதிலடி நடவடிக்கைக்கு இந்திய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். அக்டோபர் 2வது வாரத்தில் நடக்கவிருக்கும் 13வது சுற்று பேச்சுவார்த்தையில் இந்திய- சீன எல்லை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Exit mobile version