இருளில் மூழ்குமா இந்தியா? நிலக்கரி தட்டுப்பாடும் மத்திய அமைச்சகத்தின் விளக்கமும்!!

நாட்டில் நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளதால் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழகம் உட்பட சில மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. ஆனால், போதுமான நிலக்கரி கையிருப்பில் இருப்பதாகவும் இதனால் மின் தட்டுப்பாடு பிரச்சனைகள் ஏற்படாது என்றும் ஒன்றிய அமைச்சகம் பதில் அளித்திருக்கிறது.

கொரோனா காரணமாகக் கடந்த ஆண்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், மின் நுகர்வு மற்றும் பயன்பாடு குறைந்தது. ஆனால், தற்போது மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொழிற்சாலைகள் இயங்க தொடங்கிய நிலையில் ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாதங்களுக்கு மட்டும் 13.2 சதவிகிதம் வரையில் மின் தேவை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்தான் நாட்டின் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் பரவின. தமிழகத்திலும் இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே மின் உற்பத்தி செய்ய நிலக்கரி இருப்பதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் நிலக்கரி தட்டுப்பாட்டைத் தடுக்க பிரதமர் தலையிட்டு, நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்யாவிட்டால், தலைநகர் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், “மின் உற்பத்தி நிலையங்களின் தேவைகளைச் சந்திக்கும் அளவுக்கு போதுமான நிலக்கரி நாட்டில் உள்ளது” என நிலக்கரித் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

“மின் விநியோகத்தில் இடையூறு ஏற்படும் என்ற பயம் முற்றிலும் தவறானது என்றும் மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு சுமார் 72 லட்சம் டன்கள். இது நான்கு நாட்களுக்கு போதுமானது. நிலக்கரி இந்தியா நிறுவனத்திடம் 400 லட்சம் டன்களுக்கு மேல் நிலக்கரி இருப்பு உள்ளது. அது மின் உற்பத்தி நிலையங்களுக்கு விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

நிலக்கரி நிறுவனங்களிலிருந்து அதிக அளவிலான சப்ளை காரணமாக, அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி, இந்தாண்டு சுமார் 24 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நிலக்கரி நிறுவனங்களிலிருந்து தினம்தோறும் நிலக்கரி அனுப்பப்படுகிறது. அதனால் நிலக்கரி இருப்பு குறைவு என்ற அச்சம் தவறானது. உண்மையில், இந்த ஆண்டு, உள்நாட்டு நிலக்கரி விநியோகம், நிலக்கரி இறக்குமதியைக் கணிசமாக மாற்றியமைத்துள்ளது.

நாட்டில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகிப்பதுடன், மின் உற்பத்தி நிலையங்கள் அல்லாத அலுமினியம், சிமென்ட், எஃகு போன்ற ஆலைகளுக்கும், நிலக்கரி இந்தியா நிறுவனம், தினந்தோறும் 2.5 லட்சம் டன்கள் நிலக்கரியை அனுப்பி வருவது, நாட்டில் நிலக்கரி இருப்பு போதிய அளவில் உள்ளதை பிரதிபலிக்கிறது” என்றும் விளக்கம் அளித்துள்ளது.

ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் நேற்று தேசிய அனல்மின் கழகம், மின் அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாட்டில் போதுமான அளவுக்கு நிலக்கரி இருப்பு இருக்கிறது. இதனால் நாட்டில் மின் தட்டுப்பாடு ஏற்படாது” என்று உறுதியளித்தார்.

Exit mobile version