ஐரோப்பிய நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா பரவி அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல நமது நாட்டிலும் கொரோனா 2-வது அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் உப்பள்ளியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பயிற்சி மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “கர்நாடகாவில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் கொரோனா நம்மை விட்டு முழுவதுமாக நீங்கவில்லை. தொடர்ந்து நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி கொரோனாவை முழுவதுமாக ஒழிக்க வேண்டும். தற்போது ஐரோப்பிய நாடுகளில் கொரோனா 2வது அலை தொடங்கியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே போல இந்தியாவிலும் கொரோனா 2வது அலை ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் பல தனியார் மருத்துவமனைகள் கொரோனா மருத்துவ சேவையை நிராகரித்தன. ஆனால், அரசு மருத்துவர்கள் தங்களை முழுவதுமாக கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டனர். அவர்களுக்கு எனது பாராட்டுகள்” என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : இந்தியாவில் 2 நாட்களுக்கு நெட்பிளிக்ஸ் இலவசம்