ராமர் கோவில் பூஜையில் பங்கேற்பாரா மோடி?.. வி.ஐ.பிக்களை டார்கெட் செய்யும் கொரோனா

பாஜகவின் முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு, இருப்பது அக்கட்ச்சியினர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றால், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே அரசியல், சினிமா துறையை சேர்ந்த பல பிரபலங்களும் கூட நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் திமுக எம்.எல்.ஏ அன்பழகன், உத்தரபிரதேசத்தில் பாஜக அமைச்சர் ஒருவர் சிகிச்சை என சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தும் உள்ளனர்.

இந்த சூழலில் வரும் 5ம் தேதி அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல மாநிலங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கபட்டது. பாஜகவின் தேர்தல் அறிக்கையில், ராமர் கோவில் கட்டுவது என்பது முக்கிய குறிக்கோளாக இருந்ததால் இதில் பாஜக தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் மத்தியபிரதேச பாஜக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனிடையே, நோய்த்தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த உத்தரபிரதேச பாஜக பெண் அமைச்சர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எதிர்பாராத விதமாக, பாஜகவின் முக்கிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவிற்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது, அக்கட்ச்சியினர் இடையே தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால், அந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று நள்ளிரவே கர்நாடக பாஜக மூத்த தலைவரும், முதலமைச்சருமான எடியூரப்பாவிற்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.

தேசிய அளவில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து ஆட்கொல்லி நோயான கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது அக்கட்ச்சியினர் இடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அமித் ஷா பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி அயோத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். ஊரடங்கு காரணமாக நாட்டில் மக்கள் மனதில் ஏற்கனவே ஒரு நம்பிக்கையற்ற தன்மை ஆட்கொண்டுள்ளது. இந்நிலையில், ஒருவேளை எதிர்பாராத விதமாக பிரதமர் மோடி கொரோனாவால் பாதிக்கப்பட்டால் இந்தியர்கள் மத்தியில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Exit mobile version