இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு…

கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து ஒரு நாளைக்கான கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50, 362 ஆக உயர்ந்துள்ளது.


கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பெரும் தொற்றை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் இந்திய அரசு ஈடுபட்டுவருகிறது. நாடு தழுவிய பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நோய் தொற்று பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கவலையளிக்கிறது. இந்த வாரம் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை( 19.07.2020) நிலவரப்படி அன்று புதிய நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக இருந்தது.

ஆனால் நேற்றைய நிலவரப்படி மாநில அரசுகள் அளித்த விபரங்களின் அடிப்படையில் ஒரே நாளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 28 விழுக்காடாகும். அதே போல் இந்த வாரம் நாடு முழுவதும் நோய் தொற்றால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மட்டும் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக பதிவாகியுள்ளது.


புதிய நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து இதுவரை இந்தியா முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 34 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கடந்த வாரம் தினம் ஒன்றிற்கு 700க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

உச்சபட்சமாக கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 757 ஆக பதிவாகியது. நோய் தொற்று பாதிப்பில் மகாராஷ்ட்ராவிற்கு அடுத்தபடியாக தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையிலும் தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளது. இதே போல் கர்நாடகம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட ஆறு மாநிலங்களிலும் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

Exit mobile version