எதிரிகளை அழிக்கும் பிரமோஸ் சூப்பர் சானிக் ஏவுகணை..சோதனையில் அசத்திய டிஆர்டிஓ

சுமார் 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

பாகிஸ்தானை தொடர்ந்து எல்லையில் சீனாவின் அத்துமீறலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய ராணுவமும் எதிரிகளின் அத்துமீறல்களை தொடர்ந்து வெற்றிக்காரமாக முறியடித்து வருகின்றனர். அதேசமயம், சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளின் எத்தகைய தாக்குதலையும் சமாளிக்கும் வகையில் இந்திய ராணுவம் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

ராணுவ பலத்தை அதிகரிக்கும் முதல் முயற்சியாக, உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இறக்குமதியை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில், ஏவுகணைகளை அதிவேகமாக செலுத்த உதவக்கூடிய சூப்பர்சானிக் தொழில்நுட்பத்தை இந்தியா வெற்றிக்கரமாக சோதனை செய்து அசத்தியது.

இந்த சூழலில், ஒடிசாவின் பால்சோர் மாவட்டத்தில், மொபைல் லாஞ்சர் மூலம், இன்று காலை 10:30 மணியளவில் 400 கி.மீ., தூரத்தில் இருக்கக்கூடிய இலக்குகளை அழிக்கும் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டது. டிஆர்டிஓவின் பிஜே-10 திட்டத்தின் கீழ் இந்த சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

இந்த ஏவுகணையில் உள்ள ஏர் பிரேம் மற்றும் பூஸ்டர் ஆகியவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவையாகும்.
இந்த சூப்பர் சானிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள டிஆர்டிஓ தலைவர் சதீஷ்ரெட்டி, இந்த ஏவுகணையில், வருங்காலங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை சேர்ப்பதற்கு இன்று நடந்த சோதனை உதவும் எனக்கூறியுள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பூஸ்டர் மற்றும் ஏர்பிரேமுடன் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி, தன்னிறைவு இந்தியாவிற்கு ஊக்கமளிக்கும் எனக் குறிபிட்டு உள்ளார்.

Exit mobile version