வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதாக விவசாயிகள் மத்தியில் அறிவிக்க வேண்டும்:பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 10 தலைவர்கள் வலியுறுத்தல்

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியின் கூட்டணியின் 10 தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை:

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியின் கூட்டணியின் 10 தலைவர்கள் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பல லட்சம் விவசாயிகள் கடந்த நான்கு நாட்களாக டெல்லி மாநகரத்தை முற்றுகையிட்டு, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த பேரணியை மதிக்காமல், ‘புராரி மைதானத்திற்குப் போனால்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’ என்று நிபந்தனை விதிக்கும் சர்வாதிகார, மேலாதிக்க மனப்பான்மை கொண்ட மத்திய அரசுக்கு, நாங்கள் அனைவரும் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வீணாக்கி, அவர்தம் எதிர்காலத்தை இருளடையச் செய்து வருகிறது மத்திய பாஜக அரசு. இவை போதாதென்று, மின்சாரத் திருத்தச் சட்டத்தின் மூலம் இலவச மின்சாரத்தையும் பறிக்கத் திட்டமிடுகிறது.
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் புதிய உரிமைகளை அளித்துள்ளது என்று பிரதமர் பேசியிருப்பது, விவசாயிகள் போராட்டத்தை அவமதிப்பதாக உள்ளது

ஜனநாயகத்தின் மீது எள்ளளவும் அக்கறையின்றி, அராஜக நடைமுறைகளின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து, விவசாயிகளை அடக்கி ஒடுக்கிவிட வேண்டும் என்று பிரதமரும், அவரது அமைச்சரவை சகாக்களும் இருப்பது கண்டனத்திற்குரியது. விவசாயிகள் விரோத செயல்களில் பா.ஜ.க., – அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளன.
இந்தப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளை ஜந்தர் மந்தரில் போராடுவதற்கு அனுமதியளித்து, பிரதமர் அங்கேயே சென்று, விவசாயிகளிடம் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 தலைவர்கள்:

இந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தவிர, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், வி.சி.க. தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

Exit mobile version