டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் செங்கோட்டையின் மீது ஏறி முற்றுகையிட்டுள்ளதால் பதற்றம் உண்டாகியுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தொடர்ந்து டெல்லியின் எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினமான இன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர். ஏற்கனவே விவசாயிகளுடன் நடந்த 11 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 62வது நாளான இன்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்தனர்.
இவர்கள் சிங்கு எல்லை, டிக்ரி எல்லை வழியாக போலீசாரின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லிக்கு உள்ளே நுழைய முயன்றனர். அப்போது போலீசார் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசியதுடன் தடியடியும் நடத்தினர். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே அவர்கள் டெல்லிக்குள் நுழைந்ததால் விவசாயிகளை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயிகள் தற்போது தலைநகர் டெல்லிக்குள் நுழைந்து செங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாயக் கொடியை ஏற்றியுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. விவசாயிகள் போராட்டத்தால் தலைநகர் டெல்லி போர்க்களமாக காட்சியளிக்கிறது