நாட்டின் பல இடங்களில் விவசாயிகள் சக்கா ஜாம் போராட்டம்

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல இடங்களில் விவசாயிகள் சக்கா ஜாம் போராட்டம் நடத்துகின்றனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற பெயரில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.  சக்கா ஜாம் எனப்படுவது சக்கரங்களை நிறுத்துதல் என பொருள்படும். இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து முன்கூட்டியே டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  சிங்கு, சிக்ரி, காசிப்பூர் எல்லைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காசிப்பூர் எல்லையில் தடுப்பு வேலிகளுக்கு பின்னால் சாலைகளில் இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்டுள்ளன. டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் சாலை மறியல் நடைபெறாது. ஆனால் நாட்டின் பிற பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் அறிவிக்கப்பட்டபடி மறியல் போராட்டம் நடைபெறும். மறியலில் பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


சாலை மறியல் போராட்டத்தின்போது, ஆம்புலன்சுகள் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள், பள்ளி வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படாது என்று என்று விவசாயிகள் உறுதி அளித்துள்ளனர். மேலும் சாலை மறியல் போராட்டம் பிற்பகல் 3 மணிக்கு முடியும், அப்போது வாகனங்கள் ஒரு நிமிட நேரம் ஹாரன் அடித்து ஒலி எழுப்பினால் தங்களுக்கு ஆதரவு தெரிவித்ததாக எடுத்துக் கொள்வோம் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.

Exit mobile version