டெல்லி விவசாய போராட்டம் : மத்திய அரசின் பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்ற விவசாய அமைப்பினர்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் வரும் 30 ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசின் அழைப்பை ஏற்பதாக விவசாய அமைப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி:

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதே ஒரே நோக்கமாக கொண்டு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகல் பாராது டெல்லியில் எல்லைகளை ஆக்கிரமித்து தங்களது முழுப்பலத்தையும் வெளிப்படுத்திவருகின்றனர்.ஏற்கனவே மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் 5 முறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.

விவசாய அமைப்பினர்களுடன் நடந்த அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு இன்று அழைப்பு விடுத்துள்ளது.இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் பேச்சுவார்த்தை அழைப்பை விவசாய அமைப்பினர்கள் ஏற்பதாகவும், இந்த பேச்சுவார்த்தையின் நோக்கம் குறித்து மத்திய அரசு தெளிவாக விளக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

டெல்லி விஞ்ஞான் பவனில் நாளை(டிசம்பர். 30) பிற்பகல் 2 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Read more – இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு பரவிய உருமாறிய கொரோனா : 6 பேருக்கு தொற்று உறுதி

விவசாய அமைப்பினர்களுக்கு மத்திய வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வால் அழைப்பு விடுத்து எழுதிய கடிதத்தில், 3 வேளாண் சட்டங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை, மின்சார திருத்த மசோதா மற்றும் டெல்லி மற்றும் தலைநகர் பகுதியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கான அவசர சட்டம் போன்றவை குறித்து மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக இருந்து வருகின்றனர்.

நாளை நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படுமா ? விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? என்பது மத்திய அரசு வழங்கும் தீர்வை பொறுத்தது.

Exit mobile version