வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி:
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதே ஒரே நோக்கமாக கொண்டு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகல் பாராது டெல்லியில் எல்லைகளை ஆக்கிரமித்து தங்களது முழுப்பலத்தையும் வெளிப்படுத்திவருகின்றனர்.ஏற்கனவே மத்திய அரசு விவசாய அமைப்பினருடன் 5 முறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.
இந்தநிலையில், குறிப்பாக வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளும் மத்திய அரசின் யோசனையை விவசாயிகள் நிராகரித்து ரத்து செய்வதையே குறிக்கோளாக கொண்டு போராடி வந்தனர். இதனால் மத்திய அரசுக்கும் விவசாய அமைப்பினருக்கும் பேச்சுவார்த்தை நடத்த முட்டுக்கட்டையாக இருந்தது.
Read more – இன்றைய ராசிபலன் 27.12.2020!!!
தற்போது, மத்திய அரசின் பேச்சுவார்த்தையை ஏற்று மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.இதன்படி, வேளாண் துறை செயலாளர் விவேக் அகர்வாலுக்கு கடிதம் எழுதினர்.அதில் மத்திய அரசு மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இடையிலான பேச்சுவார்த்தையை 29 ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு வைத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் மத்திய அரசும் இந்த பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 30 ம் தேதி குண்ட்லி-மானேசர்-பல்வால் 6 வழிச்சாலையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.