அனைத்து சுங்கச்சாவடிகளில், பிப்ரவரி 16-ம் தேதி (இன்று) முதல் பாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வருகிறது. குறிப்பாக பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதாவது நெடுஞ்சாலையில் பயணம் மேற்கொள்ளும் பொழுது சுங்கச்சாவடியில் நீண்ட வரிசைகளில் நீங்கள் காத்திருப்பது என்பது சற்று எரிச்சலை உருவாக்கக்கூடிய விஷயம் தான். அதுவும்இ குறிப்பாக நீங்கள் வார இறுதி பயணத்தில் இருக்கும்போது இந்த எரிச்சல் இரட்டிப்பாக மாறக்கூடும். இந்த சிக்கலை நிவர்த்தி செய்யவே இந்திய அரசு சமீபத்தில் கட்டாய பாஸ்டேக் பயன்முறையை அறிமுகம் செய்தது.
ஃபாஸ்டேக் என்பது ஒரு மின்னணு கட்டண வசூல் முறையாகும், இப்போது இந்த சேவையை இந்தியாவின் ஒவ்வொரு பெரிய வங்கியும் வழங்கிவருகிறது. நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டேக் பொருத்தப்பட்ட எந்தவொரு வாகனமும் சுங்கச்சாவடியில் வாகனத்தை நிறுத்தாமல் கட்டணத்தைச் செலுத்தி டோல் கேட்டை எளிதாகக் கடந்து செல்ல முடியும். மேலும், கட்டணம் உங்கள் ஃபாஸ்டாக் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
அண்மையில் வெளிவந்த தகவலின்படி, சுங்கச்சாவடிகளில் உள்ள அனைத்து லேன்களும் இன்னு முதல் ஃபாஸ்டேக் லேன்களாக மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பின்பு மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாஸ்டேக் பெற்று செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நீங்கள் பாஸ்டேக் எடுக்கவில்லை என்றால் உடனடியாக எடுத்துவிடுவது நல்லது. அதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை, வீட்டில் உட்கார்ந்துகொண்டே அதை வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் செய்யலாம். இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி இந்த அசத்தலான வசதியை தொடங்கியுள்ளது.
வாட்ஸ்அப் செயலி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். பல வங்கிகள் தங்களது வங்கிச் சேவைகளை வாட்ஸ்அப்-ல் கொண்டுவந்துள்ளன. அதன்படி இப்போது ஐசிஐசிஐ வங்கி வாட்ஸ் ஆப் மூலம் பாஸ்டேக் வாங்கும் வசதியை கொண்டுவந்துள்ளது. இதை வாங்கும் வழிமுறைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.
- முதலில் உங்களது வாட்ஸ்அப் செயலியில் இருந்து 8640086400 என்ற எண்ணுக்கு hi என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
- அடுத்து அதில் வரும் ஆப்சன்களில் 3 என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது ICICI Bank FASTag servicesஎன்பதைக் குறிக்கும்.
- அதன்பின்னர் மீண்டும் ஒருமுறை 3 என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். இது Apply for a new tag என்பதாகும். உடனே உங்களுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும், அது ஐசிஐசிஐ பாஸ்டேக் அப்ளிகேசன் பக்கத்துக்குச் செல்லும். அதில் கேட்கப்படும் விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- அதன்பின்பு பாஸ்டாக்குக்கான கட்டணத்தைச் செலுத்தினால் உங்களது ஆர்டர் ஏற்கப்பட்டு, உங்களது முகவரிக்கு ஃபாஸ்டாக் அனுப்பி வைக்கப்படும். மேலும் நீங்கள் பாஸ்டேக் வாங்கிய பிறகு நெட் பேங்கிங் யூபிஐ போன்றவற்றின் மூலமாக அதற்கான தொகையை எளிமையாக செலுத்தலாம்.