ஏப்ரல் 25 முதல் இந்தியாவுக்கு விமான சேவைகள் நிறுத்தம்..! எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு..!

ஏப்ரல் 25 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி துபாயில் இருந்து இந்தியாவுக்கான விமானங்களை 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக முன்னணி மத்திய கிழக்கு விமான நிறுவனமான எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வரும் பெரும்பாலான பார்வையாளர்களுக்கு பிரிட்டன் பயணத் தடை விதித்த சில நாட்களுக்குப் பிறகு எமிரேட்ஸ் நடவடிக்கை வந்துள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனும் இந்தியாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை இரண்டாவது முறையாக ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இந்தியாவில் இருந்து பயணிகள் வரும்பட்சத்தில் கட்டாயமாக 10 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என்றும் பிரான்ஸ் அறிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று முதல் முறையாக 3.15 லட்சம் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது இந்தியாவில் கொரோனா தோன்றியதிலிருந்து மிக அதிகபட்ச ஒற்றை நாள் அதிகரிப்பாகும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் மோசமான சுகாதார அமைப்புக்கு இடையே, இந்தியா நேற்று ஒரே நாளில் 2,104 இறப்புகளை பதிவு செய்துள்ளது. இது இதுவரை தொற்றுநோய்களில் இந்தியா சந்தித்த அதிகபட்ச தினசரி இறப்பாகும்.

Exit mobile version